பாலாறு மாசுபாடு விவகாரம்: குழு அமைத்தது உச்சநீதிமன்றம்

பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்
Published on
Updated on
2 min read

நமது நிருபர்

பாலாறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக ஒரு தணிக்கை குழுவை அமைத்து செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழகத்தில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாகச் செல்லும் பாலாற்றில் தோல் பதனிடும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் கடும் மாசு ஏற்பட்டுள்ளது.

எனவே, இந்தத் தொழிற்சாலைகளை மூட உத்தரவிடக் கோரியும், மாசுபாட்டைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

இதை விசாரித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபடுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களுடன் கடந்த ஜனவரி 30}ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

ஆனால், அந்த உத்தரவு முறையாகப் பின்பற்றப்படவில்லை என அதிருப்தி தெரிவித்த உச்சநீதிமன்றம், பாலாறு மாசுபாடு விவகாரத்தில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்டது.

அதன்படி, அந்த மூன்று மாவட்டங்களின் ஆட்சியர்களும் உச்சநீதிமன்றத்தில் கடந்த மாதம் 11}ஆம் தேதி ஆஜராகினர். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் மற்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியும் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகினர். உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகள் பாலாறு மாசுபடுவதைத் தடுக்கத் தவறிவிட்டதாக உச்சநீதிமன்றம் அவர்களிடம் கூறியது.

இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே.பி. பார்திவாலா மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த மாசுபாட்டைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கபில் சிபல், "கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.

அப்போது நீதிபதிகள், "இந்தப் பிரச்னையை ஒரே நாளில் தீர்க்க முடியாது என்பது தெரியும். அதேவேளையில் இந்த மாசுபாட்டைத் தடுக்க தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' எனக் கூறினர்.

மனுதாரரான வேலூர் சுற்றுச்சூழல் கண்காணிப்புக் குழு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் யோகேஸ்வரன், "இந்த விவகாரத்தில் கூடுதலாக தீவிர கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வேண்டும். தொடர் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும், தொழிற்சாலைக் கழிவு நீர் சரியான முறையில் சுத்திகரிக்கப்பட்டு வெளியேற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய வேண்டும். வெளியேற்றப்படும் நீரில் அமில அளவுகளை ஆய்வு செய்ய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, பாலாறு மாசுபாடு குறித்து தணிக்கை செய்ய ஒரு குழுவை அமைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஐஐடி சென்னையைச் சேர்ந்த இரண்டு நிபுணர்கள், சுற்றுச்சூழல் அறிஞர் நாகராஜன் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. 6 மாதங்களில் இந்தக் குழு பாலாறு மாசுபாடு குறித்த தணிக்கை செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

முதல் அறிக்கையைப் பார்த்த பிறகு, அடுத்த ஆய்வை எவ்வளவு கால இடைவெளியில் மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பாக முடிவு எடுக்கப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையை 6 மாதங்களுக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com