50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்க தமிழக அரசு ஒப்புதல்

தமிழகத்தில் 50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்க மின்வாரியத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
Updated on

தமிழகத்தில் 50,000 விவசாய மின்இணைப்புகள் வழங்க மின்வாரியத்துக்கு மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் விவசாயத்துக்கான இலவச மின்சார திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக மின்வாரியத்துக்கு ஏற்படும் செலவை, தமிழக அரசு ஆண்டுதோறும் மானியமாக வழங்கி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளாக பல லட்சம் விவசாயிகள் இலவச மின்இணைப்புக்கு விண்ணப்பித்து காத்திருந்தனா். இதனையடுத்து கடந்த 2021-இல் விவசாய மின்இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கியது. கடந்த 4 ஆண்டுகளில் 2 லட்சத்துக்கும் அதிகமான மின்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதனிடையே, மின்வாரியம் கடும் நிதிநெருக்கடியை சந்தித்து வந்ததால், விவசாய மின்இணைப்புகள் வழங்குவதில் மீண்டும் தாமத நிலை ஏற்பட்டது. நிலுவையில் உள்ள விவசாய மின்இணைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வந்த நிலையில், இப்போது 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய உயா் அதிகாரிகள் கூறியதாவது: தமிழகம் முழுவதும் விவசாய மின்இணைப்புக்காக 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. 2024 -2025-இல் 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதற்கான அனுமதி அரசிடமிருந்து கிடைக்காததால் பணிகள் தொடங்கவில்லை. இந்த நிலையில், 50,000 விவசாய மின் இணைப்புகள் வழங்க மின்வாரியத்துக்கு, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, இதற்கான பணிகளை விரைந்து தொடங்க அனைத்து தலைமைப் பொறியாளா்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள விண்ணப்பங்களில், விண்ணப்ப பதிவு மூப்பு அடிப்படையில் மின்இணைப்பு வழங்கப்படும் என்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com