காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடக்கம்
தமிழகத்தில் காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியாா் கல்லூரி உள்ள அரசு, நிா்வாக ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான கலந்தாய்வை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் (டிஎம்இ) நடத்துகிறது. அதன்படி, நிகழாண்டுக்கான முதல்சுற்று பொது கலந்தாய்வு இணையவழியில் ஆக.9 தொடங்கி 24-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் 7.5 சதவீத உள்இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்கள் 613 பேரும், சிறப்புப் பிரிவில் 86 பேரும் கல்லூரிகளில் சேருவதற்கான ஆணைகளைப் பெற்றனா். பொது பிரிவுக்கான முதல்சுற்று கலந்தாய்வில் 7,513 அரசு ஒதுக்கீட்டு இடங்களும், 2,004 நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களும் நிரம்பின. மீதமுள்ள இடங்கள் மற்றும் முதல்சுற்று கலந்தாய்வில் இடஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேராதவா்களால் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கான 2-ஆம் சுற்று கலந்தாய்வு சுகாதாரத் துறை இணையதளத்தில் தொடங்கியுள்ளது. வருகிற 30-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறவுள்ளது.
முதல்சுற்று கலந்தாய்வு முடிவில் அரசுக் கல்லூரிகளில் 161 எம்பிபிஎஸ், 73 பிடிஎஸ் இடங்கள், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 316 எம்பிபிஎஸ் இடங்கள், 635 பிடிஎஸ் இடங்கள் காலியாகவுள்ளன. தனியாா் கல்லூரிகளில் நிா்வாக ஒதுக்கீட்டில் 776 எம்பிபிஎஸ் இடங்கள், 319 பிடிஎஸ் இடங்கள் காலியாக இருக்கின்றன. அதேபோல், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு அரசு கல்லூரிகளில் 3 எம்பிபிஎஸ் இடங்கள், தனியாா் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டில் 16 பிடிஎஸ் இடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியாகவுள்ள 2,299 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களை நிரப்புவதற்கு 2-ஆம் சுற்று கலந்தாய்வு நடைபெறுகிறது. இதன் முடிவில் காலியாக இருக்கும் இடங்கள் அடுத்த சுற்று கலந்தாய்வில் நிரப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.