
ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கு எதிராக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் திருமணமானது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
மேலும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணமாகிவிட்டதாகவும் அவருடைய குழந்தை தனது வயிற்றில் வளர்வதாகவும் ஜாய் கிரிஸில்டா தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார்.
தொடர்ந்து, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், விடியோக்களை சமூக ஊடகங்களில் ஜாய் கிரிஸில்டா பகிர்ந்து வருகிறார்.
இந்த நிலையில், தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவதூறாக பேசி வெளியிட்ட விடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு அளித்திருந்தார்.
இதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் மாதம்பட்டி தங்கவேலு பிரைவட் லிமிட்., நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்துக்கு 15 நாள்களில் ரூ. 12.5 கோடி இழப்பு ஏற்பட்டதாக மற்றொரு மனுவும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக கருத்து தெரிவிக்க விரும்பினால் அவரது பெயரை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் வாதிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஜாய் கிரிஸில்டா தரப்பு, வெறும் ரங்கராஜ் என்றால் யாருக்கும் தெரியாது என்றும் அவரைப் பாதுகாக்கவே மாதம்பட்டி தங்கவேலு நிறுவனம் வழக்கு தொடர்ந்திருப்பதாகவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜாய் கிரிஸில்டா பேசியதால் நஷ்டம் ஏற்பட்டதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க மாதம்பட்டி தங்கவேலு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டது.
மேலும், இரு வழக்குகளையும் சேர்த்து வருகின்ற செப். 24 ஆம் தேதி அடுத்தகட்ட விசாரணை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.