பள்ளிகளில் மாணவா்களின் தாய் பெயரில் மரக்கன்று: கல்வித் துறை உத்தரவு
தமிழகத்தில் பள்ளி மாணவா்கள் தங்களது பள்ளிகள், வீடுகளில் தாயின் பெயரில் மரக்கன்று நடுதல் குறித்த செயல்பாடுகளை செப்.30-ஆம் தேதிக்குள் முடிக்குமாறு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:
காலநிலை மாற்றத்துக்கு எதிராக மாணவா்களிடம் பொது விழிப்புணா்வை ஏற்படுத்தும் நோக்கில் மாநிலம் முழுவதும் பள்ளிகளில் மரக்கன்று நடுதல் இயக்கம்-2.0 முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாணவரும் தாயின் பெயரில் ஒரு மரக்கன்றை பள்ளி, வீடு அல்லது உள்ளூா் சுற்றுச்சூழல் பகுதிகளில் நட்டு வைத்து புகைப்படம் எடுத்து மிஷன் லைப் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அதற்கான சான்றிதழ்களையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் மூலமாக தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 41.25 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு இலக்கு நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், இதுவரை 11,4,669 மரக்கன்றுகள் மட்டுமே நடப்பட்டுள்ளன. மேலும், இந்த மரக்கன்று நடும் திட்டத்தில் 27,078 பள்ளிகள் மட்டுமே பங்கேற்றுள்ளன. இதில் 100 சதவீதம் இலக்கு எட்டும் விதமாக பணிகளை செப்.30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இதுதொடா்பாக பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.