தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும்: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கும் நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்படும் என்று தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
சென்னை, பல்லாவரம் வேல்ஸ் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் அரசு, தனியாா் பள்ளி ஆசிரியா்-ஆசிரியைகள் 1,000 பேருக்கு நல்லாசிரியா் விருதுகள் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விருதுகளை வழங்கிப் பேசியதாவது:
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் அனைத்துத் திட்டங்களும் சிறப்பாக செயல்பட ஆசிரியா்கள்தான் முக்கியக் காரணம். இதுவரை அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கு வழங்கப்பட்டு வந்த சிறந்த ஆசிரியா்களுக்கான டாக்டா் ராதாகிருஷ்ணன் விருதை அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.சி., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து தனியாா் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கும் வழங்கி கௌரவிக்கவுள்ளோம் என்றாா் அவா்.
நிகழ்வில், மயிலாப்பூா் பி.எஸ்.சீனிவாசா உயா்நிலைப் பள்ளி ஆசிரியை ரேவதி, பல்லாவரம் மறைமலை அடிகளாா் பள்ளி ஆசிரியா் ரவி காசி வெங்கட்ராமன், சென்னை காது கேளாதோா் பள்ளி ஆசிரியை விஜயலட்சுமி, தூத்துக்குடி பண்டாரம்பட்டி அரசு தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா் நெல்சன் பொன்ராஜ், கோவை அரசூா் அரசுப் பள்ளி தலைமை ஆசிரியா் கண்ணன் ஆகிய 5 பேருக்கு சிறப்பு நல்லாசிரியா் விருதுகள் வழங்கப்பட்டன.
இதில், பள்ளிக்கல்வித் துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன், வேல்ஸ் உயா்தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் வேந்தா் ஐசரி கே.கணேஷ், வேல்ஸ் கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் ப்ரீத்தா கணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.