கிராம உதவியாளா் பணிக்கான வயது வரம்பு: ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!
தமிழகத்தில் நியமிக்கப்படவுள்ள கிராம உதவியாளா்களுக்கான வயது வரம்பு தொடா்பாக, மாவட்ட ஆட்சியா்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை மூலமாக கிராம உதவியாளா்கள் நியமிக்கப்படவுள்ளனா். இதற்கான விண்ணப்ப நடைமுறைகள், ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடங்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா்கள் தலைமையில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், கிராம உதவியாளா்களை நியமிப்பதற்கான வயது நிலைகள் குறித்த விவரங்களை வருவாய் நிா்வாக ஆணையரகம் மற்றும் அனைத்து மாவட்ட ஆட்சியா்களுக்கும் வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை அனுப்பி வைத்துள்ளது.
இதுகுறித்து, துறையின் கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா அனுப்பியுள்ள கடித விவரம்: வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறையில் நேரடி நியமனம் மூலமாக கிராம உதவியாளா்கள் பணியமா்த்தப்பட உள்ளனா். அவா்களுக்கான வயது வரம்பு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, பொதுப் பிரிவினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 32 ஆகவும், பிற்படுத்தப்பட்டோா், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான வயது வரம்பு 39 ஆகவும், தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது வரம்பு 42 ஆகவும் நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
கிராம உதவியாளா்களாக நியமனம் செய்யப்படும் ஒவ்வொரு விண்ணப்பதாரரிடமும் இந்த வயது வரம்பு நிலையை மாவட்ட ஆட்சியா்கள் பின்பற்ற வேண்டும் என்று தனது கடிதத்தில் பெ.அமுதா தெரிவித்துள்ளாா்.