
திருவள்ளூர்: செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து கூடுதலாக 265 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி, செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து ஏற்கெனவே சென்னை மாநகராட்சி பகுதிக்கு 1180 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இதனுடன் கூடுதலாக ரூ.68.78 கோடி மதிப்பில் 265 மில்லியன் குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு நிறைவு பெற்ற நிலையில், இன்று அதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சென்னை குடிநீர் வாரியம் சார்பில் சென்னை மாநகருக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் 1,180 மில்லியன் லிட்டர் குடிநீருடன் கூடுதலாக செம்பரம்பாக்கம் நீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து நாளொன்றுக்கு 265 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்து சுத்திகரிப்பு நிலையத்தில் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து 530 மில்லியன் லிட்டர் குடிநீர் சுத்திகரிக்கும் திறன்கொண்ட அந்த நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் விளக்கமாக எடுத்துரைத்தார்.
மேலும், குடிநீர் வடிகால் வாரியத்தின் செயல்பாடுகள் குறித்து மக்கள் புகார் செய்யும் வகையிலான குடிநீர் மொபைல் செயலியையும் அவர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி நியமனம் மூலம் உதவி புவியியலாளர் பணிக்கு தேர்ந்து எடுக்கப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் அவர் வழங்கினார்.
இந்த திட்டம் மூலம் மடிப்பாக்கம், வளசரவாக்கம், உத்தண்டி, துரைப்பாக்கம், புழல், நெற்குன்றம், செம்மஞ்சேரி, மடிப்பாக்கம், மாதவரம், இடையன் சாவடி, கோடம்பாக்கம், துரைப்பாக்கம், வளசரவாக்கம், ராமாபுரம், சடையன் குப்பம், சூரப்பட்டு, ஜல்லடியான்பேட்டை, புத்தகம், மாத்தூர், கதிர்வேடு, நீலாங்கரை, கொருக்குப்பேட்டை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 16.40 லட்சம் பேர் பயன்பெறவுள்ளனர்.
நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, சிறுபான்மையினர் நலம் மற்றும் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ஆட்சியர் மு.பிரதாப் மற்றும் பலர் உடனிருந்தனர்.
இதையும் படிக்க... சென்னையில் போலி கால்சென்டர்கள்: 2 பெண்களை கைது செய்த புதுச்சேரி போலீஸ்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.