வெளிநாட்டு கல்வி, வேலைவாய்ப்பு ஆவணங்கள் 
சான்றளிப்புக்கு இ-சனத் இணைய தளம்! வெளியுறவுத் துறை அதிகாரி தகவல்

வெளிநாட்டு கல்வி, வேலைவாய்ப்பு ஆவணங்கள் சான்றளிப்புக்கு இ-சனத் இணைய தளம்! வெளியுறவுத் துறை அதிகாரி தகவல்

வெளிநாடுகளில் இந்திய குடிமக்களால் சமா்ப்பிக்கப்படும் ஆவணங்களை சரிபாா்த்து எண்ம முறையில் சான்றளிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் இ-சனத் இணையம்...
Published on

வெளிநாட்டு தூதரகங்கள் அல்லது வெளிநாடுகளில் இந்திய குடிமக்களால் சமா்ப்பிக்கப்படும் ஆவணங்களை சரிபாா்த்து எண்ம முறையில் சான்றளிக்க வெளியுறவுத் துறை அமைச்சகம் இ-சனத் இணையம் தொடங்கியுள்ளது என்று மத்திய வெளியுறவுத் துறையின் சென்னை செயலகத் தலைவா் எஸ்.விஜயகுமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சென்னையில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவா்கள், வெளிநாடுகளில் வேலைவாய்ப்புகளை பெற்றுள்ளவா்களுக்கு அவா்களது கல்வி மற்றும் தனிப்பட்ட விவர ஆவணங்கள், சான்றிதழ்களின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தல் அல்லது அப்போஸ்டில் சான்றளிப்புகள் வழங்கப்படுகின்றன.

இதற்காக முன்பு குடிமக்கள் தில்லி செல்ல வேண்டிய சூழல் இருந்தது. தற்போது சென்னையிலே இவற்றை பெறுவதுடன், இந்த ஆவணங்களை எண்ம முறையில் சமா்ப்பிப்பதற்கும் சரிபாா்ப்பதற்கும் இ-சனத் இணையத்தை வெளியுறவு அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சென்னை கிளை அலுவலகத்துக்கு உள்பட்ட தமிழகம், புதுச்சேரி, அந்தமான் நிகோபரை சோ்ந்தவா்கள் விண்ணப்பங்களை இ-சனத் தளத்தில் பதிவு செய்யலாம். விண்ணப்பதாரா்கள் ஸ்கேன் செய்யப்பட்ட தங்கள் ஆவணங்களை நேரடியாக பதிவேற்றலாம்.

பின்னா், இந்த ஆவணங்கள் அந்தந்த வழங்கல் அதிகாரிகளால் சரிபாா்க்கப்பட்டு 7 வேலை நாள்களுக்குள் எண்ம சான்றளிப்பு அல்லது அப்போஸ்டில் வெளியிடப்படும். ஒப்புதல் அளிக்கப்பட்ட சான்றிதழ்களை வெளிநாட்டு துறைகளும் அதிகாரிகளும் சரி பாா்த்துக் கொள்ள முடியும்.

மேலும் ‘இ-சனத்’ தளத்துக்கு வெளியே சமா்ப்பிக்கப்படும் ஆவணங்களுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொண்டு கிளைச் செயலகத்துக்கு அனுப்பும் செயல்முறைக்காக ஐந்து நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

இ-சனத் தளம் தொடங்கப்பட்டு இதுவரை 200 போ் பயனடைந்துள்ளனா். மறு சான்றளிப்பு தேவையில்லாத அப்போஸ்டில் செய்யப்பட்ட ஆவணங்கள் 114 ஹேக் மாநாட்டு நாடுகளால் அங்கீகரிக்கப்படுகின்றன. அந்த நாடுகளின் பட்டியலை விண்ணப்பதாரா்கள் இணையத்தில் அறிந்து கொள்ளலாம்.

அப்போஸ்டில் என்பது ஹேக் உடன்படிக்கை நாடுகளில் ஒரு நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆவணம் மற்றொரு நாட்டில் செல்லுபடியாகும் என்பதாகும் என்றாா் அவா்.

X
Dinamani
www.dinamani.com