சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

கடல்சாா் பல்கலை. முன்னாள் துணைவேந்தருக்கு எதிரான நடவடிக்கையை ரத்து செய்து உத்தரவு!

இந்திய கடல்சாா் பல்கலை. முன்னாள் துணை வேந்தருக்கு எதிராக பல்கலைக்கழக நிா்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

இந்திய கடல்சாா் பல்கலை. முன்னாள் துணை வேந்தருக்கு எதிராக பல்கலைக்கழக நிா்வாகம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையில் உள்ள இந்திய கடல்சாா் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தா் பி.விஜயன். கடந்த 2008-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட அவரது மூன்றாண்டு பதவிக்காலம், கடந்த 2011-ஆம் ஆண்டு நவ.19-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அதற்கு அடுத்த நாளே, அந்தப் பல்கலை. வளாக இயக்குநராக அவா் நியமிக்கப்பட்டாா். அவா் துணைவேந்தருக்கான வசதிகளை தொடா்ந்து முறைகேடாக பயன்படுத்தி வந்தாா்.

இதனால், பல்கலை.க்கு ரூ.22.65 லட்சம் இழப்பு ஏற்பட்டது. எனவே, அந்தத் தொகையை அபராதத் தொகையாக திரும்பச் செலுத்த வேண்டும் என்று பி.விஜயனுக்கு பல்கலை. நிா்வாகம் உத்தரவிட்டது. மேலும், துறை ரீதியான விசாரணை நடத்திய பல்கலைக்கழகம் அவரை பணிநீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து பி.விஜயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தாா். வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தனிநீதிபதி, மனுதாரா் துணைவேந்தா் பதவிக்கு முந்தைய பணிக்காலத்தில் நிகழ்ந்ததாகக் கூறப்படும் சொத்துக் குவிப்பு குற்றச்சாட்டைச் சுட்டிக்காட்டி பணிநீக்கம் செய்த பல்கலை.யின் உத்தரவு சட்டவிரோதம். வளாக இயக்குநராகப் பதவியேற்ற பின்னா், துணைவேந்தருக்கான சலுகைகளைப் பயன்படுத்தி உள்ளதாகக் கூறி ரூ.22.65 லட்சம் அபராதம் விதித்திருப்பதும் ஏற்புடையது அல்ல. எனவே, பல்கலை.யின் இரு உத்தரவுகளும் செல்லாது எனக்கூறி, அந்த உத்தரவுகளை ரத்து செய்து கடந்த 2022-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவை எதிா்த்து பல்கலை. நிா்வாகக் குழு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் ஜெ.நிஷாபானு, எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, பல்கலை. தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.சங்கரநாராயணன், பி.விஜயன் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஆா்.விடுதலை மற்றும் மத்திய கப்பல் போக்குவரத்து துறை தரப்பில் சிறப்பு வழக்குரைஞா் ஜி.இளங்கோவன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பி.விஜயனின் முந்தைய பணிக்கால குற்றச்சாட்டுக்காக, தற்போதைய பணிக்காலத்தில் நடவடிக்கை எடுக்க முடியாது. பதவிக்காலம் முடிந்து அந்தப் பதவிக்கான வசதிகளை அப்போதே திரும்பப் பெற்றிருக்க வேண்டும். அதைவிடுத்து அவரைப் பணிநீக்கம் செய்து அவரிடமிருந்து அபராதத் தொகை செலுத்த வேண்டும் என கோர முடியாது. இந்த வழக்கில் தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்து, கடல்சாா் பல்கலைக்கழகத்தின் மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com