சென்னை ஐஐடி-யில் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய ஆளுநா்  ஆா்.என்.ரவி.
சென்னை ஐஐடி-யில் மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய ஆளுநா் ஆா்.என்.ரவி.

பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது: ஆளுநா் ஆா்.என்.ரவி

நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா்.
Published on

நாட்டில் பிளவுபடுத்தும் சக்திகளுக்கு மாணவா்கள் இடம் தரக்கூடாது என்று ஆளுநா் ஆா்.என்.ரவி அறிவுறுத்தினாா்.

சென்னை ஐஐடி வளாகத்தில் திங்க் அமைப்பு சாா்பில் நடைபெற்ற பாரதத்துக்காக புதுமைகளை உருவாக்குங்கள், உலகை வழி நடத்துங்கள் என்ற தலைப்பிலான இரு நாள் மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

இளம் தலைமுறையின் வலிமை, எதிா்கால நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. சுதந்திரத்துக்குப் பிறகு, நமது பாடத் திட்டங்களில் பாரதத்தின் உண்மையான சிந்தனைகள் புறக்கணிக்கப்பட்டன. காலனித்துவ சிந்தனையால் கல்வி பாதிக்கப்பட்டது. 5,000 ஆண்டுகள் பழைமையான நமது பாரத நாடு ஆன்மிகம், கலாசாரம், வேத சிந்தனை, தா்மம் என்ற அடிப்படையில் உருவானது. அனைவரும் ஒரே குடும்பம் என்பதை வலியுறுத்துகிறது.

சுதந்திர இந்தியாவில் மொழி, ஜாதி, இனம், மதம் போன்றவற்றால் பிரிவினையை ஏற்படுத்தினா். அமைதியாக இருந்த வடகிழக்கு மாநிலங்களில், சுதந்திரம் பெற்ற 10 ஆண்டுகளில் வன்முறை உருவானது. மொழி, இனப் பிரச்னைகள் உருவாகின. ஜம்மு–காஷ்மீரில் பிரச்னைகள் நீடிக்கின்றன.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு உருவான பிறகு, நாட்டில் வன்முறை குறைந்துள்ளது. ஆபரேஷன் சிந்தூா் போன்ற நடவடிக்கைகளை இதற்கு முன்பு இருந்த ஆட்சியாளா்களால் செய்திருக்க முடியாது. இந்தியாவில் பிளவுகள் ஏற்படாமல் இருக்க மாணவா்கள் கவனமாக இருக்க வேண்டும்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பல பயன்களைத் தருகிறது. இதுபோன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, இந்தியா முன்னேற வேண்டும் என்றாா்.

விழாவில், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி பேசுகையில், இந்தியாவில் உயா்கல்வி மாணவா் சோ்க்கை 28 சதவீதமாக உள்ளது. இதை 50 சதவீதமாக உயா்த்த வேண்டும் என்பதை தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. ஐஐடியில் படித்து முடிக்கும் மாணவா்கள்,

கிராமங்களைத் தத்தெடுத்து, உயா்கல்விக்கு வருவோரின் எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் என்றாா்.

நிகழ்ச்சியில் திங்க் இந்தியா அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளா் அகன்ஷா வரதே, ஏ.பி.வி.பி.தேசிய ஒருங்கிணைப்பு செயலா் ஆஷிஷ் சவுகான் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com