சொன்னார்களே, செய்தார்களா? நாகை பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்!

நாகை மாவட்ட மக்களின் பிரச்னைகளை பட்டியலிட்ட விஜய்...
TVK vijay
விஜய்TVK
Published on
Updated on
1 min read

நாகையில் பிரசாரம் மேற்கொண்ட விஜய், அந்த மாவட்ட மக்களின் பிரச்னைகளை பட்டியலிட்டு திமுக அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி தவெக தலைவர் விஜய், மக்கள் சந்திப்பு பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

இன்று(சனிக்கிழமை) நாகப்பட்டினம், புத்தூர் ரவுண்டானா பகுதியில் உள்ள அண்ணா சிலை அருகே தொண்டர்கள் மத்தியில் பேசிய விஜய்,

"மீன் ஏற்றுமதியில் 2-வது இடம் நாகப்பட்டினம்தான். ஆனால் மீன்களை பதப்படுத்தும் நவீன தொழிற்சாலைகள் இங்கு இல்லை. அடிப்படை வசதிகள் இல்லாத வீடுகள் அதிகம் இருக்கின்றன.

இந்த சாதனைகளுக்கு எல்லாம் எங்கள் ஆட்சிதான் சாட்சி என்று அவர்கள் பேசி பேசி நம் காதில் ரத்தம் வந்ததுதான் மிச்சம். இவர்கள் ஆட்சி செய்தது போதாதா?

இலங்கை கடற்படையால் மீனவர்கள் தாக்கப்படுவது பற்றியும் அதற்கான தீர்வு பற்றியும் மதுரை மாநாட்டில் பேசியிருந்தேன். அது தவறா? மீனவர்களுக்காக நிற்பது நம் கடமை. நான் இப்போது அல்ல, முன்பிருந்தே மீனவர்களுக்காக பேசி வருகிறேன். 2011ல் நான் இங்கு வந்தேன்.

இலங்கைத் தமிழர்களுக்காகவும் நாம் குரல் கொடுக்க வேண்டும். அது நம்முடைய கடமை.

மீனவர்களுக்காக வெறும் கடிதம் மட்டும் எழுதிவிட்டு அமைதியாக இருக்க நாம் ஒன்றும் கபட நாடக திமுக அரசு இல்லை. தமிழக மீனவர்கள், இந்திய மீனவர்கள் என்று பிரித்துப் பார்க்கும் பாசிச பாஜக அரசும் இல்லை. மீனவர்களின் பிரச்னைக்கு நிரந்தரமான தீர்வு தேவை.

நாகையில் மண் வளத்தைப் பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும்.

கடலோர கிராமங்களில் மண் அரிப்பைத் தடுக்கும் அலையாத்திக் காடுகள் அழிப்பைத் தடுக்க வேண்டும்.

சொந்த குடும்பத்தின் வளர்ச்சியில் சொந்த குடும்பத்தின் சுயநலத்தில் கவனம் செலுத்திய முதல்வர், இங்கு மக்களின் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க காவிரி நீரை கொண்டு வந்தாரா?

பாரம்பரியமிக்க கடல் சார்ந்த இந்த ஊரில் ஒரு அரசு கடல்சார் கல்லூரி நிறுவலாம். மீன் சார்ந்த தொழிற்சாலை அமைத்தார்களா? வேலைவாய்ப்பைப் பெருக்கும் தொழில்வளத்தையாவது பெருக்கலாம், அதையாவது செய்தார்களா?

நாகை, கோடியக்கரை என இங்குள்ள சுற்றுலா நகரங்களை மேம்படுத்தலாம்.

உப்பு ஏற்றுமதிக்கு ஏதேனும் வழிவகை செய்து கொடுக்கலாம்.

நாகூர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர் இல்லாத நிலையே இருக்கிறது.

நாகை பேருந்து நிலையம் சுத்தமாக இல்லை. அதனை சரிசெய்வார்களா?

ரயில் நிலைய பராமரிப்பு பணிகள் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கிறது..

ஏற்கெனவே இருந்த ரயில் தொழிற்சாலை மூடிவிட்டார்கள். அதனை மீண்டும் திறக்கச் செய்வார்களா?

மேலகோட்டை மேம்பாலம், தஞ்சாவூர் - நாகப்பட்டினம் சாலை பணிகள் எப்போது முடியும்?

மழையால் இங்கு நெல் மூட்டை சேதம் அதிகம் ஏற்படுகிறது, அதற்கு தீர்வு ஏற்படுத்தித் தரலாம்" என்று பேசினார்.

Summary

TVK vijay listed the Nagapattinam issues

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com