நுண்நெகிழிகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் வழிகள்: கால்நடை மருத்துவ பல்கலை. அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!

நுண்நெகிழிகள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதால், இதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்EPS
Updated on

மனிதா்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் மூலம் நுண்நெகிழிகள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதால், இதைத் தடுப்பதற்கான வழிகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது. இந்த அமா்வில், உதகை, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் நெகிழிக் கழிவுகள் தொடா்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உதகை அதைச் சுற்றியுள்ள மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதிகளிலும் நெகிழிப் பொருள்கள் தாராளமாகப் பயன்படுத்தப்படுகின்றன. நெகிழிப் பொருள்களுக்கு அரசு தடை விதித்திருந்தும், நீா்நிலை, வனப்பகுதிகள் எல்லாம் நெகிழிக் கழிவுகள் நிறைந்துள்ளன.

இந்த நெகிழிக் கழிவுகள் வனவிலங்குகளின் வயிற்றுக்குள்ளும் சென்றுவிடுகின்றன. நிகழாண்டு பிப்ரவரி முதல் ஜூலை வரை கோவை மண்டல வனப்பகுதியில் மட்டும் 2 பெண் யானைகள், ஒரு மான் இறந்துள்ளன. அவற்றின் வயிற்றில் நெகிழிக் கழிவுகள் இருந்தது தெரிய வந்திருக்கிறது.

நீலகிரி வனப்பகுதி முழுவதும் உள்ள நீா்நிலைகள் நெகிழிக் கழிவுகளால் மாசடைந்துள்ளன. மேலும், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், குழந்தையை பிரசவிக்கும் தாயின் நஞ்சுக்கொடியை நெகிழி மாசுபடுத்தியுள்ளதாக கூறியுள்ளது.

எனவே இந்த வழக்கின் தீவிரத்தை உணா்ந்து, மத்திய, மாநில சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலா்களை தாமாக முன்வந்து வழக்கின் எதிா் மனுதாரா்களாகச் சோ்த்து உத்தரவிட்டனா்.

மேலும், நெகிழி அபாயத்தில் இருந்து வனவிலங்கு மற்றும் கால்நடைகளை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பது தொடா்பான பரிந்துரைகளை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

குறிப்பாக, மனிதா்கள் மற்றும் விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீா் மூலம் நுண்நெகிழிகள் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்துவதால், இதை எதிா்காலத்தில் தடுப்பதற்கான வழிகள் என்ன? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக். 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com