சென்னை: எதையும் கூகுள், செய்யறிவிடம் கேட்டுக் கொள்ளலாம் என்ற மெத்தனத்துடன் மாணவர்கள் இருக்கக் கூடாது என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
மாணவர்களின் வெற்றிக்கு ஆசிரியர் காரணம் என சொல்வதுதான் மிகப்பெரிய விருது, மாணவர்களிடம் எதையும் அன்புடன் சொல்லுங்கள், அழுத்தம் கொடுக்க வேண்டாம் என்று ஆசிரியர்களுக்குக் கூறியிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.
சென்னையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், எதுவானாலும் கூகுள், செய்யறிவிடம் (ஏஐ) கேட்டுக் கொள்ளலாம் என மெத்தனத்தில் இருந்துவிடக் கூடாது.
மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவாற்றலை வளர்க்க வேண்டும். தொழில்நுட்பம், மனித சந்ததிக்கான வேறுபாட்டை புரிய வைக்க வேண்டும். இலக்கியங்கள், பொது அறிவு, சமூக ஒழுக்கம், சுற்றுச்சூல் குறித்து புரிய வைக்க வேண்டும்.
மாணவர்களுக்கு எந்தளவு அறிவாற்றல் முக்கியமோ உடல்நலமும் முக்கியமும். மாணவர்களின் குடும்ப சூழல், பின்புலம் அறிந்து செயல்பட வேண்டும். நீங்கள்தான் இரண்டாவது பெற்றோர். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கல்வி சூழலில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம்.
அரசுப் பள்ளி மாணவர்கள் பெருமையின் அடையாளமாக உயர்ந்து வருகின்றனர். பள்ளிகளின் உள்கட்டமைப்பு தரம் உயர்ந்துள்ளது. மாணவர்களுக்கு சாதி உணர்வு, பாலின பாகுபாடு, போன்ற பிற்போக்குத்தனம் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும்.
சமத்துவம், சமூக நீதி தேவை பற்றி மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். எதற்கு, எப்படி? என கேட்கும் பகுத்தறிவு மிக்க தலைமுறையாக மாணவர்களை உருவாக்க வேண்டும்.
புதுப்புது முயற்சியை எடுக்க வேண்டும். அதன் மூலம் மாணவர்களின் எதிர்காலத்தை மாற்றியமைக்க வேண்டும். மாணவர்களிடம் எதையும் அன்புடன் சொல்லுங்கள். அவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்காதீர்கள். மாணவர்களுக்குத்தான் ஆசிரியக் பாடம் எடுப்பார்கள். ஆசிரியர்களுக்கே படம் எடுத்தவர் அமைச்சர் அன்பில் மகேஸ். ஆசிரியர்கள் பாடங்களை மட்டும் அல்ல கல்வியுடன் அனுபவத்தையும் மாணவர்களுக்கு சொல்லிக் கொடுப்பவர்கள். மாணவர்களின் சிந்தனையை தூண்டி, அறிவை மேம்படுத்த வேண்டியது நமது கடமை என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.