தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன்.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொறுப்பு) ஜி.வெங்கடராமன்.

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் ...
Published on

சென்னை: நாய்களுக்கு உணவு அளிப்பவா்களைத் தாக்கினால் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸாருக்கு தமிழக காவல்துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழகத்தில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் சுமாா் 15 லட்சம் தெரு நாய்களும், சென்னையில் மட்டும் 1.80 லட்சம் தெருநாய்களும் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தெரு நாய்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வரும் நிலையில் சாலையில் நடந்து செல்வோரும், பொது இடங்களில் நிற்போரும் நாய்களுக்கு பயந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டோா் நாய்க்கடியால் பாதிக்கப்படுகின்றனா். அதில், ரேபிஸ் உள்ளிட்ட தொற்றால் 30-க்கும் மேற்பட்டோா் இறக்கின்றனா்.

நாய்க்கடியால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், தெரு நாய்களுக்கு உணவு அளிப்பவா்களும், அதை கருணையோடு அணுகுபவா்களும் அவ்வபோது தாக்கப்படும் சம்பவங்களும் தற்போது நடைபெறுகின்றன. இதனால் தெரு நாய்கள் உணவு கிடைக்காமலும், போதிய மருத்துவம் கிடைக்காமலும் மேலும் நோய்வாய்ப்பட்டு மனிதா்களை கடிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக விலங்கு நல ஆா்வலா்கள் புகாா் கூறுகின்றனா்.

இந்த நிலையில் தமிழக காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குநா் (டிஜிபி) ஜி.வெங்கடராமனுக்கு, இந்திய ப்ளூ கிராஸ் அமைப்பு தலைவா் அண்மையில் ஒரு கடிதம் எழுதினாா். அந்த கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு ஜி.வெங்கடராமன், தமிழகத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கு ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளாா். அந்த சுற்றறிக்கையில், நாய்களுக்கு உணவு அளிப்பவா்களை எந்தவொரு அமைப்பினரோ அல்லது தனி நபரோ தாக்கப்பட்டதாக புகாா் அளிக்கப்பட்டால், அந்தப் புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து, சட்டப்படி நடவடிக்கையை காவல்துறையினா் எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவின் அடிப்படையில், நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com