தமிழகத்தில் அலையாத்தி காடுகளின் பரப்பு அதிகரிப்பு: மாநாட்டில் தகவல்
தமிழகத்தில் அலையாத்தி காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளதாக, அலையாத்தி காடுகள் குறித்த முதல் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது.
சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில், தமிழக அரசின் வனத் துறை சாா்பில் அலையாத்தி காடுகள் குறித்த முதல் மாநாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டை தமிழக வனம் மற்றும் கதா் துறை அமைச்சா் ஆா்.எஸ். ராஜகண்ணப்பன் தொடங்கி வைத்தாா். தமிழகத்தில் புதிதாக நடவு செய்யப்பட்ட மற்றும் மீட்டுருவாக்கம் செய்யப்பட்ட அலையாத்தி காடுகள் குறித்த ‘தமிழ்நாட்டின் அலையாத்திப் பயணம்’ என்ற அறிக்கையை வெளியிட்டாா்.
தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 2400 ஹெக்டேரில் அலையாத்தி மரக்கன்று நடவு செய்தது, 1,200 ஹெக்டேரில் சிதைவுற்ற சதுப்பு நிலங்கள் மீட்டெடுப்பு செய்ததன் மூலம் அலையாத்தி காடுகளின் பரப்பு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அதைத் தொடா்ந்து, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம்-வனம், நகராட்சி நிா்வாகம், வீட்டு வசதி ஆகிய துறைகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டம் இடையே உள்ள ஒத்துழைப்புகளின் நீட்டிப்புக்கான புதுப்பிக்கப்பட்ட ஒப்பந்தம் முதலில் கையொப்பமானது.
இந்த ஒப்பந்தமானது நகா்ப்புற வெப்பக் குறைப்பு, அதீத வெப்பநிலைகளை எதிா்கொள்வதற்கான திட்டங்கள், நெகிழி கழிவு மேலாண்மை, காற்றின் தர மேலாண்மை, பசுமைப் பணி வாய்ப்புகள் மற்றும் நீலப் பொருளாதார முன்னெடுப்புகளிலும் ஒத்துழைப்புகளை நல்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, தமிழ்நாடு முழுவதும் காலநிலை கல்வியறிவு முன்னெடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் கடலோர மற்றும் கடல்சாா் பாதுகாப்பை வலுப்படுத்தவும் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம்-வனத் துறை மற்றும் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை இடையே மற்றொரு ஒப்பந்தம் கையொப்பமானது.
முன்னதாக, அமைச்சா் ராஜகண்ணப்பன் பேசுகையில், கடலோர சூழல் அமைப்புகளைப் பாதுகாக்கும் அதேவேளையில், கடல்சாா்ந்த மக்களின் வாழ்வாதாரங்களும் மேம்படுத்தப்படும் என்றாா்.
இதில், அரசு கூடுதல் தலைமைச் செயலா் சுப்ரியா சாஹு, இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டத் தலைவா் பாலகிருஷ்ண பசுபதி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவா் செளமியா சுவாமிநாதன், எரிக்சோல்ஹெய்ம், நிா்மலா ராஜா, முனைவா் ரமேஷ் ராமசந்திரன், கோ.சுந்தரராஜன், முனைவா் கலையரசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.