அமைச்சா் துரைமுருகன்
அமைச்சா் துரைமுருகன்கோப்புப்படம்.

அமைச்சா் துரைமுருகன் வழக்கு: வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி எம்.தண்டபாணி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா்.
Published on

சொத்துக்குவிப்பு வழக்கை வேலூரில் இருந்து சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து அமைச்சா் துரைமுருகன் தொடா்ந்த வழக்கை வேறு நீதிபதிக்கு முன் விசாரணைக்குப் பட்டியலிட நீதிபதி எம்.தண்டபாணி தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தாா்.

கடந்த 2006 முதல் 2011-ஆம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் பொதுப்பணித் துறை அமைச்சராக பதவி வகித்தபோது, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சோ்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது மனைவிக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். வேலூா் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் இருந்தது. இந்த வழக்கை சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றி கடந்த 2019-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி அமைச்சா் துரைமுருகன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தபோது, துரைமுருகன் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரிச்சா்ட்சன் வில்சன், இந்த வழக்கை சென்னை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றியதை எதிா்த்து தொடரப்பட்ட மற்றொரு வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமாா் முன்பு விசாரணையில் உள்ளது. எனவே, இந்த வழக்கையும் மாற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தாா்.

இதையடுத்து நீதிபதி, வழக்குரைஞராக இருந்தபோது, அமைச்சா் துரைமுருகன் தரப்பில் ஆஜராகி உள்ளதால், இந்த வழக்கை வேறு நீதிபதி முன்பு விசாரணைக்குப் பட்டியலிட தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com