சாலைப் பணி ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு முடித்துவைப்பு
சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்க சாலைகளில் தோண்டப்படும் பள்ளங்களால் ஏற்படும் உயிரிழப்பு தொடா்பாக சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் முடித்துவைத்தது.
சென்னையைச் சோ்ந்த வழக்குரைஞா் ஸ்டாலின் ராஜா உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீா் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்காக எவ்வித பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்படுகின்றன. இந்தப் பள்ளங்களில் தவறி விழும் பலா் பலத்த காயம் அடைவதோடு, உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மழைநீா் வடிகால் பள்ளங்களில் விழுந்து உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக ஏற்கெனவே பல சட்டங்கள் உள்ளன. பொத்தாம் பொதுவாக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.