கூட்டணி தர்மம் 2 பக்கமும் இருக்க வேண்டும்: திமுக மீது காங்கிரஸ் எம்பி ஜோதிமணி விமர்சனம்!

திமுக மீது காங்கிரஸ் எம்பி ஜோதிமணியின் விமர்சனம் தொடர்பாக...
ஜோதிமணி - செந்தில் பாலாஜி
ஜோதிமணி - செந்தில் பாலாஜி
Published on
Updated on
2 min read

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும் என்று திமுகவை காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி விமர்சித்துள்ளார்.

கரூர் நகர காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் கவிதா, திமுகவில் இணைந்ததாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

”சில தினங்களாக காங்கிரஸ் கட்சி சார்பாக அர்ஜெண்டினாவில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பங்கேற்க வேண்டியிருந்ததால் கரூர் மாவட்ட திமுக மாவட்ட செயலாளர்  செந்தில் பாலாஜியின்   இந்தப் பதிவு குறித்து உடனடியாக எதிர்வினையாற்ற முடியவில்லை. 

கூட்டணி தர்மம் என்பது இரண்டு பக்கமும் இருக்க வேண்டும். திமுக வின் மாவட்ட செயலாளர், ஒரு முன்னாள் அமைச்சர்  காங்கிரஸ் கட்சியை இப்படி பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் எப்படிப் புரிந்துகொள்வது?

கூட்டணியின் பெயரால் இதுபோன்ற அவமரியாதையை ஒருபோதும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். இப்படி நடப்பது இது முதல் முறையல்ல. கூட்டணி என்பது ஒரு கொள்கை அடிப்படையில், பரஸ்பர புரிதல், ஒத்துழைப்பு, நம்பிக்கை   மற்றும் மரியாதையின் அடிப்படையில்  உருவாக்கப்படுவது. எந்தச் சூழலிலும் இதில் எதனோடும் சமரசம் செய்துகொள்ள முடியாது. 

கரூர் நாடாளுமன்றத் தொகுதியில், காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் இதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய ,காங்கிரஸ் கட்சியின் சுயமரியாதையைக் காப்பாற்ற வேண்டிய  கடமையும்,பொறுப்பும் எனக்கு இருக்கிறது.

இம்மாதிரியான அவமரியாதயை எளிதில் கடந்து போய்விட முடியாது.  கூட்டணிக்குள் இதுபோன்ற கசப்பான சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலினின் கவனத்திற்கு எடுத்துச் செல்வார் என்று நம்புகிறேன். 

தமிழ்நாட்டின் மொழி,இனம், பண்பாடு , எதிர்காலம் அனைத்திற்கும் பாசிச சக்திகளால் நெருக்கடி ஏற்பட்டிருக்கிற இன்றைய அரசியல் சூழலில் நம் அனைவருக்கும், தமிழ்நாட்டு மக்களின் நலனை முன்னிறுத்திச் செயல்பட வேண்டிய கடமையும்,பொறுப்பும் இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதுவே தமிழ்நாட்டிற்கு நன்மை செய்யும்.

பின்குறிப்பு : தமிழ்நாடு மகளிர் காங்கிரசின் கடுமையான எதிர்வினையை அடுத்து செந்தில் பாலாஜியின் இப்பதிவு இப்பொழுது நீக்கப்பட்டிருக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Summary

Congress MP Jyothimani has criticized the DMK, saying that the alliance should be a two-way street.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com