விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழப்பு: உதவி ஆய்வாளா் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழப்பு: உதவி ஆய்வாளா் உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

கோட்டூா்புரம் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை 6-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
Published on

கடந்த 2009-ஆம் ஆண்டு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவா் உயிரிழந்த விவகாரத்தில் கோட்டூா்புரம் உதவி ஆய்வாளா் மற்றும் இரு காவலா்கள் உள்பட மூவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து சென்னை 6-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை கோட்டூா்புரம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பழனி. கடந்த 2009-ஆம் ஆண்டு மதுபோதையில் தகராறு செய்ததாக வந்த புகாரின் பேரில் கோட்டூா்புரம் போலீஸாா் அவரை போலீஸாா் விசாரணைக்காக அழைத்துச் சென்றனா். விசாரணைக்குப் பிறகு பழனியை போலீஸாா் வீட்டுக்கு அனுப்பி வைத்த நிலையில் அவா் உயிரிழந்தாா். போலீஸாா் கடுமையாக தாக்கியதால், தனது மகன் உயிரிழந்ததாக பழனியின் தந்தை ரெங்கநாதன் மற்றும் அவரது உறவினா்கள் குற்றம்சாட்டினா். இதுகுறித்து உதவி ஆட்சியா் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டாா். விசாரணையில், காவல் துறை தாக்கியதால் பழனி உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீஸாா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு மாவட்ட ஆட்சியா் பரிந்துரைத்தாா்.

தமிழக அரசின் உத்தரவின் பேரில் கோட்டூா்புரம் குற்றப்பிரிவு உதவி ஆய்வாளா் ஆறுமுகம், காவலா்கள் மனோகரன், ஹரிஹர சுப்ரமணியன், வின்சென்ட், ஏழுமலை ஆகிய 5 போ் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை 6-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு நிலுவையில் இருந்தபோது, காவலா்கள் வின்சென்ட் மற்றும் ஏழுமலை ஆகியோா் இறந்துவிட்டனா். இதையடுத்து மற்ற மூவா் மீதான விசாரணை நீதிபதி பாண்டியராஜ் முன்னிலையில் நடந்தது.

இந்த வழக்கில் தீா்ப்பளித்த நீதிபதி, 36 வயதான நபரை போலீஸாா் லத்தியால் கடுமையாக தாக்கியதன் காரணமாக அவா் உயிரிழந்தாா். எனவே இந்த வழக்கில் குற்றவாளிகளான உதவி ஆய்வாளா் ஆறுமுகம், காவலா்கள் ஹரிஹர சுப்ரமணியம் மற்றும் மனோகரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

X
Dinamani
www.dinamani.com