
திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, ஏமாற்றியதாக ஜாய் கிறிஸில்டா கொடுத்த புகாரில், சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் வரும் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராககும்படி நீலாங்கரை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுக்கும் திருமணமானது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது.
மேலும், தனக்கும் மாதம்பட்டி ரங்கராஜுக்கும் திருமணமாகிவிட்டதாகவும் அவருடைய குழந்தை தனது வயிற்றில் வளர்வதாகவும் ஜாய் கிரிஸில்டா தகவல்களை வெளியிட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலான நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக, ஜாய் கிரிஸில்டாவிடன் விசாரணை நடைபெற்று முடிந்துள்ளது. மேலும், மாதம்பட்டி ரங்கராஜிடன் விசாரணை நடத்துவதற்காக, வரும் 26 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி, மாதம்பட்டி ரங்கராஜுக்கு நீலாங்கரை காவல் துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மாதம்பட்டி ரங்கராஜின் வழக்கு
இதனிடையே, தன்னை பற்றி அவதூறு கருத்துகள் தெரிவிக்க ஜாய் கிரிஸில்டாவுக்கு தடை விதிக்கக் கோரியும், அவதூறாக பேசி வெளியிட்ட விடியோக்களை நீக்க உத்தரவிடக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மனு அளித்திருந்தார்.
இதேபோல், மாதம்பட்டி ரங்கராஜ் பங்குதாரராக இருக்கும் நிறுவனத்தை தொடர்புபடுத்தி ஜாய் கிரிஸில்டா பேசியதால், அந்நிறுவனத்துக்கு 15 நாள்களில் ரூ. 11.21 கோடி இழப்பு ஏற்பட்டதாக மற்றொரு மனுவும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், இரு வழக்குகளையும் சேர்த்து, இன்று(செப். 24) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
ஜாய் கிரிஸில்டா தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “மாதம்பட்டி ரங்கராஜ் நிறுவனம் குறித்து ஜாய் கிரிஸில்டா எவ்வித பதிவும் போடவில்லை, இழப்பு எப்படி ஏற்பட்டது, எத்தனை ஆர்டர்கள் ரத்தானது? முன்பணம் திரும்பப் பெறட்டதா? என்பது குறித்த விரிவான விளக்கமும் தெரிவிக்கவில்லை.
சமையல் ஆர்டர் ரத்தானதிற்கும், ஜாய் கிரிஸில்டா பதிவுக்கும் சம்மந்தம் இல்லை” என்று வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.