
தமிழக அரசின் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டு முன்னேற வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
சென்னையில் நடைபெற்ற `கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில்,
``நீங்கள் படித்து முன்னேறுவதால், நீங்கள் மட்டுமின்றி உங்கள் குடும்பமும் முன்னேறும். குடும்பங்கள் முன்னேறினால், மாநிலங்கள் முன்னேறும்; மாநிலங்கள் முன்னேறினால், நாடு முன்னேறும்.
அன்றைக்கு சென்னை மாகாண பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை நீதிக் கட்சி அறிமுகப்படுத்தியது. தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை காமராஜர் கொண்டு வந்தார். அதுதான் படிப்படியாக வளர்ந்து, இன்று நமது அரசு கொண்டு வந்திருக்கிற காலை உணவுத் திட்டம்.
4 ஆண்டுகளில் புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம், நான் முதல்வன் திட்டம், மாதிரிப் பள்ளிகள், ஸ்மார்ட் வகுப்புகள், விளையாட்டுத் துறைக்கு சிறப்பான திட்டங்கள் என்று ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
ஒருவேளை உணவு தருவதாலும், மாதம் ரூ.1000 தருவதாலும் என்னவாகப் போகிறது? என்று சிலர் நினைக்கலாம். காலை உணவுத் திட்டம் அறிமுகமானதிலிருந்து, மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டதிலிருந்து, பன்னிரண்டாம் வகுப்பு படித்தவர்களில் 75 சதவிகிதத்தினர், உயர்கல்வியில் சேர்ந்துள்ளனர். குறிப்பாக, உயர்கல்வியில் சேரும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் அரசுப் பள்ளியில் படித்த 1,878 மாணவர்கள், முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். இன்றைக்கு கல்வியில் தமிழ்நாட்டின் எழுச்சியை இந்தியாவின் மற்ற மாநிலங்கள் திரும்பிப் பார்க்கிறது.
நம்முடைய திட்டங்களை அவர்களின் மாநிலங்களில் செயல்படுத்த முயற்சி செய்து வருகின்றனர். இந்த எழுச்சியைப் பொறுத்துக்கொள்ள முடியாமல்தான், தமிழகத்தில் கல்வியில் தடை ஏற்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும். நம்முடைய திட்டங்களாலும், உங்களின் வளர்ச்சியாலும் அது நிச்சயம் நடக்கும்.
அனைவருக்கும் கல்வி; அனைவருக்கும் உயர்தர கல்வி என்பதுதான் என் இலக்கு. நமது அரசு உருவாக்கித் தருகிற வாய்ப்புகளையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு, நீங்கள் உயர உயர பறக்க வேண்டும். நீங்கள் இளங்கலை படித்துவிட்டு, நல்ல வேலைக்குச் சென்றாலும் முதுகலைப் படிப்பும் படிக்க வேண்டும்; ஆராய்ச்சிப் படிப்பும் படிக்க வேண்டும். உலகம் ரொம்ப பெரிது. உங்கள் படிப்புக்குத் துணையாக, உங்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரவும் இந்த முத்துவேல் கருணாநிதி இருக்கிறேன்.
கல்வியில் சிறந்த தமிழ்நாடு, கல்வியில் உயர்ந்த தமிழ்நாடாக மாற வேண்டும். மாறும்; நிச்சயமாக மாற்றுவோம்’’ என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க: வாழ்க்கைக்காக கொஞ்சம் படியுங்கள்: மாணவர்களுக்கு சிவகார்த்திகேயன் அறிவுறுத்தல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.