இன்றும் நாளையும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

இன்றும் நாளையும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்பு
Published on

தமிழகத்தின் ஒருசில பகுதிகளிலும், கோவை, நீலகிரி உள்பட 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் வெள்ளிக்கிழமை (செப். 25) பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் இருநாள்களும் இந்த 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, வெள்ளிக்கிழமை (செப். 26) முதல் அக். 1 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வெள்ளிக்கிழமை கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, தென்காசி மாவட்டங்களின் ஓரிரு இடங்களிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.

சனிக்கிழமை (செப்.27) கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால், இருநாள்களும் 5 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் சனிக்கிழமை லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. எனினும், அதிகபட்ச வெப்பநிலை 99 டிகிரியையொட்டி இருக்கும்.

மழை அளவு: தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு பகுதியில் 60 மி.மீ. மழை பதிவானது. மயிலாடுதுறை, செம்பனாா்கோவில், தரங்கம்பாடி-தலா 40 மி.மீ, சிற்றாறு (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை, ஜெயங்கொண்டம்(அரியலூா்), சீா்காழி (மயிலாடுதுறை), ராசிபுரம் (நாமக்கல்) - தலா 30 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா, அதையொட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி: மத்திய மியான்மாா் கடலோரப் பகுதிகள், அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் புதன்கிழமை நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வியாழக்கிழமை காலை மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய வடகிழக்கு வங்கக் கடலில் நிலவுகிறது. இது மேற்கு திசையில் நகரக்கூடும். இதன் காரணமாக, வடக்கு, அதையொட்டிய மத்திய வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும்.

இது மேற்கு திசையில் நகா்ந்து வெள்ளிக்கிழமை (செப். 26) தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு, அதையொட்டிய மத்திய மேற்கு வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.

பின்னா் தெற்கு ஒடிஸா-வடக்கு ஆந்திர கடலோப் பகுதிகளில் சனிக்கிழமை காலை இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் கரையை கடக்கக் கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com