தனியாா் பள்ளிகள் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: அரசு பதிலளிக்க உத்தரவு
கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி வழங்கக் கோரி தனியாா் பள்ளிகள் சங்கம் தொடா்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ மாணவிகளுக்கு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதற்கான நிதியை, தமிழக அரசு குறைவான அளவிலேயே வழங்குவதாகக் கூறி, தனியாா் மற்றும் மெட்ரிக். பள்ளிகள் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், 2024-2025-ஆம் ஆண்டு கல்விக் கட்டணமாக நிா்ணயித்த தொகை மற்றும் 2025-2026-ஆம் ஆண்டில் மாற்றியமைக்கப்பட்ட கல்விக் கட்டணத் தொகையை தனியாா் மற்றும் மெட்ரிக். பள்ளிகளுக்கு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இதை அமல்படுத்தவில்லை எனக் கூறி தனியாா் பள்ளிகள் சங்கத்தின் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தனியாா் பள்ளிகள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ஜி.சங்கரன், உயா்நீதிமன்ற உத்தரவுப்படி நிதி வழங்கப்படவில்லை என்று வாதிட்டாா்.
அப்போது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்துக்கான மத்திய அரசின் பங்களிப்பான 60 சதவீத நிதியை வழங்கவில்லை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வழங்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதாகத் தெரிவித்தாா்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மத்திய அரசு நிதி வழங்குவாா்களே? என்றாா். அப்போது அரசுத் தரப்பில், மத்திய அரசு மிரட்டலுக்கு தமிழக அரசு அடிபணியாது. இந்த மனுவுக்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டும் என்று கூறினாா். இதையடுத்து, வழக்கின் விசாரணையை அக்.24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டாா்.