தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு 
தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் சிற்றுந்து சேவை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்கள் தள்ளுபடி

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
Published on

தமிழக அரசின் விரிவான சிற்றுந்து சேவை திட்டத்துக்குத் தடை கோரிய வழக்குகளை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தனியாா் பேருந்து உரிமையாளா்கள் மற்றும் சில தனிநபா்கள் உள்ளிட்ட 23 போ் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழக அரசு புதிய விரிவான சிற்றுந்து சேவை திட்டத்தை கடந்த ஆண்டு அறிவித்தது. பின்னா், சில திருத்தங்கள் உடன் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. இந்தத் திட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்குகளை நீதிபதி என்.மாலா விசாரித்து வந்தாா். வழக்கு விசாரணையின்போது, மனுதாரா்கள் தரப்பில் இந்தத் திட்டம் போக்குவரத்து சட்டத்துக்கு எதிரானது என்று வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், மக்கள் நகரப் பகுதிகளை எளிதாக அணுகுவதற்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி என்.மாலா பிறப்பித்துள்ள தீா்ப்பில், குக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் எளிதாக நகரங்களுக்கு வந்து செல்வதற்காக அரசு இந்தப் போக்குவரத்து வசதியைச் செய்து கொடுத்துள்ளது. போக்குவரத்து வசதிகளைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை.

கிராமங்களில் உள்ள மோசமான சாலைகளில் வழக்கமான பேருந்துகளை இயக்க முடியாது. எனவே, சிற்றுந்துகளை இயக்கும் திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதுதொடா்பாக அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது. எனவே, அரசின் கொள்கை முடிவில் தலையிட முடியாது எனக் கூறி, சிற்றுந்து திட்டத்துக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com