
சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கரூரில் மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தின்போது அவர் இன்று பேசுகையில், அதிமுக ஆட்சியில் பள்ளிகளை திறந்தோம். ஆனால் திமுக ஆட்சியில் 207 பள்ளிகளை மூடிவிட்டார்கள். இவர்களெல்லாம் கல்வியிலே சிறந்த மாநிலம் தமிழ்நாடு என்று நிகழ்ச்சி நடத்துகிறார்கள். செந்தில் பாலாஜி எப்படிபட்டவர் என்று இந்த கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
அவர் நடிப்பிலே சிறந்த நடிகர். சிவாஜி கணேசனை விட சிறந்த நடிகர் செந்தில் பாலாஜி. ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வோரு வேடம் போடுவார். புதுபுது யுக்தியை கையாள்வர். அத்தனையும் கிரிமினல் எண்ணம். கவர்ச்சிகரமாக தேர்தல் நேரத்தில் பேசி வாக்குகளைப் பெறுகின்றவர். தேர்தலின் போது அவருக்கு ஓட்டுப்போட்ட மக்களுக்கு போலி வெள்ளிக் கொலுசு கொடுத்தவர்.
அவருக்கு ஓட்டுபோட்ட மக்களைக்கூட ஏமாற்றியவர். தேர்தல் முடியும் வரை திமுகவில் இருப்பார். ஏற்கெனவே 5 கட்சிக்கு போய்விட்டு வந்துவிட்டார். முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜிக்கு அளவுக்கு மீறிய அதிகாரம் கொடுத்து ஆட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார். செந்தில் பாலாஜிக்கு அவரே அவரால் காப்பாற்றிக் கொள்ள முடியாது. சுமார் 450 நாள்கள் சிறையில் இருந்தவர்தான் செந்தில் பாலாஜி.
அப்படிபட்டவரை நம்பி தவறான செயலில் ஈடுபடுபவர்களுக்கு அரசு அதிகாரிகள் உடந்தையாக இருந்தால் அவர்களையும் எவராலும் காப்பாற்ற முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.