விஜய் கைது செய்யப்படுவாரா? கரூரில் முதல்வர் ஸ்டாலின் பதில்!

கரூர் பலி குறித்து முதல்வர் ஸ்டாலினின் செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி...
முதல்வர் மு.க. ஸ்டாலின்
முதல்வர் மு.க. ஸ்டாலின்TNDIPR
Published on
Updated on
2 min read

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.

கரூரில் சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 குழந்தைகள் உள்பட 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து, உடனடியாக சென்னையில் இருந்து நள்ளிரவு 1 மணியளவில் தனிவிமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் ஸ்டாலின், திருச்சி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார்.

அங்கிருந்து சாலை வழியாக கரூருக்கு காரில் புறப்பட்ட முதல்வர், ஒன்றரை மணிநேரப் பயணத்துக்குப் பிறகு அதிகாலை 3 மணியளவில் கரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வந்தடைந்தார்.

முதலில் பிணவறையின் வெளியே வைக்கப்பட்டிருந்த சடலங்களுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய முதல்வர், அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம்விசாரித்தார். பின்னர், மருத்துவர்களுடன் சிகிச்சை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினார்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அதிகாலை 3.50 மணியளவில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:

”மிகுந்த துயரத்தோடு, கனத்த இதயத்தோடு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். கரூரில் நடந்துகொண்டிருக்கும் இந்த கொடூரமான விபத்தைப் பற்றி விவரிக்க முடியாத அளவுக்கு சோகமான சூழல் ஏற்பட்டுள்ளது. அதனைப் பற்றி விவரிக்கக்கூட என் மனது இடம் கொடுக்கவில்லை. அந்தளவு வேதனையில் உள்ளேன்.

நேற்றிரவு 7.45 மணியளவில் அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, கரூரில் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டதாக தகவல் கிடைத்தது. உடனடியாக கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை தொடர்புகொண்டு விவரத்தை கேட்டறிந்த பின்னர், அவரை மருத்துவமனைக்கு செல்ல அறிவுறுத்தினேன். தொடர்ந்து மாவட்ட ஆட்சியரிடமும் கூடுதல் விவரங்களைக் கேட்டறிந்தேன்.

சிறிது நேரத்தில் மரண செய்திகள் வரத் தொடங்கியது. உடனடியாக அருகிலுள்ள அமைச்சர்கள் அனைவரையும் தொடர்பு கொண்டேன். தஞ்சாவூர் சென்றுகொண்டிருந்த அன்பில் மகேஸை உடனடியாகச் செல்ல உத்தரவிட்டேன். தொடர்ந்து, சென்னையில் இருந்து மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம், டிஜிபி உள்ளிட்டோரை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினேன்.

தொடர்ந்து, மூத்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு உள்ளிட்டோரை அழைத்துக் கொண்டு தலைமைச் செயலகத்துக்குச் சென்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம்.

அருகிலுள்ள மாவட்டங்களைச் சார்ந்த மருத்துவ ஊழியர்கள் கரூருக்கு விரைந்து செல்ல அறிவுறுத்தியதன் பேரில், அவர்களும் வந்துசேர்ந்துள்ளனர்.

இதுவரை 39 பேரை நாம் இழந்திருக்கிறோம். ஆண்கள் 13 பேர், பெண்கள் 17 பேர், ஆண் குழந்தைகள் 4 பேர், பெண் குழந்தைகள் 5 பேர் ஆவர். ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்தில் இத்தனை பேர் இறந்தது என்பது இதுவரை நடக்காதது, இனி நடக்கக்கூடாதது. மேலும், தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 26 ஆண்கள், 25 பெண்கள் விரைந்து குணமடைய விரும்புகிறேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சமும், காயமடைந்து சிகிச்சையில் உள்ளவர்களுக்கு தலா ரூ. ஒரு லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளேன்.

மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நீதிபதி விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணி விமானத்துக்குதான் முதலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்தேன். ஆனால், இந்த கொடூரமான காட்சிகளைப் பார்த்தபோது மனசாட்சி கேட்கவில்லை. உடனடியாக நள்ளிரவு ஒரு மணியளவில் விமானத்தைப் பிடித்து வந்துள்ளேன்.” எனத் தெரிவித்தார்.

விஜய் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்விக்கு, ”அரசியல் நோக்கத்தோடு எதுவும் கூறவிரும்பவில்லை. ஆணையத்தின் விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் பதிலளித்தார்.

Summary

Chief Minister Stalin's press conference on Karur death

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com