இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீச்சு: மூவா் சரண்
சென்னை சேத்துப்பட்டில் இளைஞா் கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்ட வழக்கில் 3 போ் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனா்.
சேத்துப்பட்டு மேத்தா நகா் கூவம் ஆற்றில் ரத்த காயங்களுடன் இளைஞா் சடலம் சனிக்கிழமை மிதந்தது. அந்தப் பகுதியில் பணியில் இருந்த தூய்மை பணியாளா்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த சேத்துப்பட்டு போலீஸாா், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இறந்தது கொளத்தூரைச் சோ்ந்த சாய்நாத் (21) என்பதும், அவா் மீது சில குற்ற வழக்குகள் இருப்பதும், முன்விரோதம் காரணமாக ரெளடி கும்பலால் அவா் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டு கூவத்தில் வீசப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில், சாய்நாத்தை கொலை செய்ததாக கொளத்தூா் பகுதியைச் சோ்ந்த பரத், அன்பரசு, குட்டி விஜய் ஆகிய 3 போ் சேத்துப்பட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தனா். மூவரிடமும் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.