
தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை கரூர் கூட்ட நெரிசல் பலிக்கு கவனக்குறைவாகச் செயல்பட்ட தமிழக அரசு, காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தின் நெரிசலில் 39 பேர் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் நேற்றைய (செப்.27) பிரசாரக் கூட்டத்தின் நெரிசலில் இதுவரை 39 பேர் உயிரிழந்தும் பலர் மருத்துவமையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வுக்கு பலரும் தங்களது விமர்சனங்களையும் இரங்கலையும் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலல் இருப்பது வழக்கமாகியிருக்கிறது என தமிழக அரசின் மீது கண்டனம் கூறியிருப்பது தவெக தொண்டர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
அவரது பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
கவனக்குறைவாகச் செயல்பட்ட தமிழக அரசு, காவல்துறைக்கு கண்டனம்
கரூரில், தவெக தலைவர் திரு. விஜய் அவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில், கூட்ட நெரிசலில், குழந்தைகள் உட்பட சுமார் நாற்பது பேர் உயிரிழந்திருப்பதாக வந்துள்ள செய்தி மிகவும் அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது. பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அனைவருக்கும் உரியச் சிகிச்சை அளிக்க வேண்டுமென்று தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன். உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு அரசியல் கட்சியின் கூட்டத்திற்கு, எத்தனை பேர் வருவார்கள் என்பதை முறையாகக் கணக்கிட்டு, அதற்கேற்ப இடத்தைத் தேர்ந்தெடுத்துக் கொடுப்பதும், கூட்டத்திற்கு வரும் பொதுமக்கள் பாதுகாப்புக்குத் தேவையான அளவு காவல்துறையினரை பணியமர்த்துவதும் காவல்துறையின் பொறுப்பு. திரு. விஜய் அவர்கள் கூட்டத்தில், மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வருகின்றன. இத்தனை கவனக்குறைவாகத் தமிழக அரசும், காவல்துறையும் செயல்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
எதிர்கட்சியினர் கூட்டங்களுக்கு போதிய பாதுகாப்பில்லை
திமுகவினர் நடத்தும் கூட்டங்களுக்கு, அந்த மாவட்டத்தின் மொத்த காவல்துறையினரையும் அனுப்பிப் பாதுகாப்பு கொடுக்கும் திமுக அரசு, எதிர்க்கட்சிகள் நடத்தும் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமலிருப்பது வழக்கமாகியிருக்கிறது.
உடனடியாக, உயிரிழந்தவர்கள் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படாததால் இந்த விபத்து நடந்ததா என்பது குறித்தும், மின்சாரம் தடைப்பட்டது குறித்தும் முழு விசாரணை நடத்தி, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.