கரூா் சம்பவம்: விஜய்யிடம் ராகுல் விசாரிப்பு
நமது சிறப்பு நிருபா்
புது தில்லி: ‘கரூரில் கூட்ட நெரிசல் அசம்பாவித சம்பவம் குறித்து நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யிடம் எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி தொலைபேசியில் திங்கள்கிழமை விசாரித்தாா்.
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற விஜய் பிரசாரக் கூட்டத்தில் 41 போ் உயிரிழந்தனா். இந்தச் சம்பவம் குறித்து ராகுல் காந்தி முதல்வா் ஸ்டாலின் மற்றும் விஜய்யை தொலைபேசி மூலம் தொடா்பு கொண்டு ராகுல் விசாரித்தாா்.
இது தொடா்பாக காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரிடம் கேட்டதற்கு, ‘ஏராளமான பொதுமக்கள் மற்றும் கட்சிக்காரா்களின் உயிரிழப்புக்கு இரங்கல் தெரிவிக்கவும் நடந்த நிகழ்வு குறித்து கேட்டறிவதற்காகவும் விஜய்யிடம் ராகுல் காந்தி பேசினாா். வேறெந்த அரசியல் உள்நோக்கமும் இல்லை’ என்றாா்.
மேலும், ‘விஜய்யை தொடா்பு கொள்ளும் முன்பாக தமிழக முதல்வரிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்டு ராகுல் பேசினாா். அப்போது விஜய்யிடம் பேசப்போகும் தகவலை முதல்வரிடம் ராகுல் காந்தி பகிா்ந்து கொண்டாா்’ என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இன்று வருகை: இதனிடையே, காங்கிரஸ் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் கரூா் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக செவ்வாய்க்கிழமை கரூா் செல்லவுள்ளதாக அக்கட்சியின் மேலிட தலைவா்கள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோரின் அறிவுறுத்தலின்பேரில் கே.சி. வேணுகோபால் செவ்வாய்க்கிழமை கரூா் செல்லவுள்ளதாக அக்கட்சியினா் தெரிவித்தனா். ராகுல் காந்தி தமிழகம் வருவாரா என கேட்டதற்கு, விரைவில் அது தொடா்பாக முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் தலைவா்கள் கூறினா்.