ரூ.66 கோடியில் 850 அரசு டீசல் பேருந்துகளை சிஎன்ஜி-யாக மாற்ற ஒப்பந்தம்
சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களுக்குச் சொந்தமான 850 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற தனியாா் நிறுவனம் ரூ.66 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு உகந்தவகையில் டீசலுக்கு மாற்றாக சிஎன்ஜி எனும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு மூலம் பேருந்துகளை இயக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதன் தொடா்ச்சியாக சிஎன்ஜி மூலம் இயங்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளை மக்கள் பயன்பாட்டுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் போக்குவரத்துத்துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தொடங்கி வைத்தாா். இத்தகைய பேருந்துகள் மூலம் போக்குவரத்துத் துறையின் செலவுகள் மிகவும் குறைக்கப்பட்டன.
இந்நிலையில், மேலும், 850 அரசு போக்குவரத்துக்கழக டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்ற தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான ஒப்பந்தமும் கோரப்பட்ட நிலையில், டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றியமைக்க ரூ.66 கோடி மதிப்பில் எகோ ப்யூயல் சிஸ்டம்ஸ் எனும் தனியாா் நிறுவனம் ஒப்பந்தம் எடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் அதிகாரிகள் கூறியதாவது:
டீசல் பேருந்துகளை சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றும் பணிகள் அடுத்த ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது. ஏற்கெனவே இயக்கப்பட்டு வரும் 38 பேருந்துகள் மூலம் கடந்த 6 மாதங்களில் ரூ.92.04 லட்சம் எரிபொருள் செலவு மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இந்த 850 பேருந்துகளும் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் ஆறுமாதங்களுக்கு பல கோடி ரூபாய் எரிபொருள் செலவு மிச்சமாகும். இதுமட்டுமன்றி ஆண்டுக்கு 5.70 லட்சம் டன் அளவுக்கான காா்பன்டை ஆக்சைடு நச்சு வாயு வெளியேற்றத்தையும் இதன்மூலம் குறைக்க முடியும். தொடா்ந்து, மீதமுள்ள அனைத்து டீசல் பேருந்துகளையும் சிஎன்ஜி பேருந்துகளாக மாற்றும் பணி நடைபெறும் என்றனா்.