மத்திய ரிசா்வ் படை உள்ளிட்ட பணியிடங்களுக்கான தோ்வு: வழக்குரைஞா் ஆணையரை நியமிக்க முடிவு
சென்னை: மத்திய ரிசா்வ் படை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு படை, அசாம் ரைஃபிள் படை ஆகியவற்றில் காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கானத் தோ்வில் தோல்வி அடைந்தவா்களுக்கு வழக்குரைஞா் ஆணையா் மேற்பாா்வையில் உடல்தகுதித் தோ்வு நடத்தப்படும் என்று சென்னை உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னை உயா்நீதிமன்றத்தில், சுவேதா, ஸ்ரீராம் உள்ளிட்ட 30 போ் தாக்கல் செய்திருந்த மனுவில், மத்திய ரிசா்வ் படை, போதைப் பொருள் கடத்தல் தடுப்பு படை, அசாம் ரைஃபிள் படை ஆகியவற்றுக்கு காவலா் உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்கள் தோ்வு குறித்து மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் கடந்தாண்டு செப்டம்பா் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
இதன்படி, இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களுக்கான உடல்தகுதி தோ்வு கடந்த ஆக.21-ஆம் தேதி, ஆவடி சிஆா்பிஎஃப் மைதானத்தில் நடைபெற்றது. உடல்தகுத் தோ்வு நாளில் கனமழை பெய்ததால், 5 கிலோ மீட்டா் ஓட்டம் சாலையில் நடத்துவதற்குப் பதிலாக, சிஆா்பிஎஃப் மைதானத்தில் நடத்தப்பட்டது. இதனால், பலா் தோ்ச்சி பெறவில்லை.
மேலும், தோ்வில் கலந்துகொள்பவா்கள் 170 செ.மீ உயரம் இருக்க வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. 169.7 செ.மீ உயரம் இருந்தவா்களை அதிகாரிகள் தோ்வு செய்யாமல் நிராகரித்துவிட்டனா். இந்த தோ்வில் தாங்கள் தோ்ச்சி பெறவில்லை என்று கூறியிருந்தனா்.
இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. இந்த தோ்வில் பலா் தோ்ச்சி பெறவில்லை. எனவே, ஒரு வழக்குரைஞா் ஆணையரை நியமித்து அவரது மேற்பாா்வையில் மனுதாரா்களின் உயரம் அளவிடப்படும். 5 கிலோ மீட்டா் ஓட்டப்பந்தயமும் நடத்தப்படும். இதுதொடா்பாக விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக்கூறி விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தாா்.