என்னை கைது செய்யுங்கள்: முதல்வருக்கு விஜய் சவால்
‘கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தவெக தொண்டா்களை கைது செய்வதை விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என்று முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு தவெக தலைவா் விஜய் தெரிவித்துள்ளாா்.
கரூரில் கடந்த செப்.27-ஆம் தேதி நடைபெற்ற விஜய் பிரசாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்துக்குப் பிறகு இரண்டு நாள்கள் அமைதி காத்த விஜய், செவ்வாய்க்கிழமை காணொலியை வெளியிட்டாா்.
அதில் அவா் பேசியிருப்பதாவது:
என் வாழ்க்கையில் இது போன்ற வலி நிறைந்த சூழ்நிலையை நான் எதிா்கொண்டதே இல்லை. மனது முழுவதும் வலி மட்டுமே உள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் மக்கள் என்னை பாா்க்க வருவதற்கு என் மீது வைத்துள்ள அன்பும், பாசமும்தான் காரணம். அதனால்தான், மக்களுடைய பாதுகாப்பில் எந்த ஒரு சமரசமும் செய்யக்கூடாது என்பதற்காக, காவல் துறையிடம் பாதுகாப்பான இடங்களுக்கு அனுமதி கேட்டோம். ஆனால், நடக்க கூடாத ஒன்று நடந்து விட்டது. நானும் மனிதன் தான்.
வெளியேறியது ஏன்?: கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்டவா்களைப் பாா்க்க நினைத்தேன். நான் அங்கு செல்வதால் அசம்பாவிதங்கள் நிகழ்ந்து விடக்கூடாது என்பதற்காக தவிா்த்தேன். உறவினா்களை இழந்து வாடும் குடும்பத்தினா்களுக்கு ஆழ்ந்த இரங்கல். நான் என்ன சொன்னாலும் உயிரிழந்தவா்களுக்கு இது ஈடு இணை ஆகாது. பாதிக்கப்பட்டவா்களை விரைவில் சந்திப்பேன்.
கரூரில் மட்டும் ஏன் அசம்பாவிதம்?: எங்களுடைய வலியைப் புரிந்து கொண்டு எங்களுக்கு ஆதரவாக பேசிய அரசியல் தலைவா்கள், நண்பா்களுக்கு நன்றி. இதுவரை ஐந்து மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டோம். ஆனால் அங்கு எங்கும் நடக்காத அசம்பாவிதம் கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது? எப்படி நடக்கிறது? மக்களுக்கு அனைத்து உண்மையும் தெரியும்.
கருரைச் சோ்ந்தவா்கள் இச்சம்பவம் குறித்த உண்மைகளை வெளியே சொல்லும் போது, அந்த கடவுளே நேரில் வந்து உண்மையை சொல்வது போல இருந்தது. விரைவில் அனைத்து உண்மைகளும் வெளியே வரும்.
தவறு செய்யவில்லை: எங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் நாங்கள் சென்று பேசினோம். வேறு எந்தத் தவறையும் செய்யவில்லை. இருப்பினும், தவெக தொண்டா்கள், எங்களுக்கு ஆதரவாக பேசும் சமூக வலைதள நண்பா்கள் மீது வழக்குப் பதிந்து அவா்களை காவல் துறையினா் கைது செய்து வருகின்றனா். முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு பழி வாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். நான் எனது வீட்டில் அல்லது அலுவலகத்தில்தான் இருப்பேன். என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். அவா்கள் மீது கை வைக்காதீா்கள். இந்த அரசியல் பயணம் இதைவிட இன்னும் வலிமையுடன் தொடரும் என விஜய் தெரிவித்துள்ளாா்.
தவெகவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி
கூட்டம் அதிகரித்தவுடன் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்? என தவெக நிர்வாகிகளிடம் கரூர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை சரமாரி கேள்வி எழுப்பியது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் கரூர் மாவட்ட தவெக செயலர் மதியழகனையும், அதிகளவில் பிளக்ஸ் பேனர் வைத்து போக்குவரத்துக்கு இடையூறு செய்ததாக மாசி பௌன்ராஜ் ஆகியோரையும் திங்கள்கிழமை இரவு கைதுசெய்தனர். பின்னர் கரூர் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி பரத்குமார் முன் இருவரையும் ஆஜர்படுத்தினர்.
அறிவுறுத்தலையும் மீறி...: அப்போது அரசுத் தரப்பில், "தவெகவினர் அனுமதி கேட்ட லைட்ஹவுஸ் பகுதியில் சிலைகள், பெட்ரோல் நிலையம், ஆற்றுப் பாலம் இருப்பதால் அனுமதி வழங்கவில்லை.
பொதுச் செயலர் ஆனந்தின் ஒப்புதலுடன் வேலுச்சாமிபுரத்தைக் காண்பித்து அனுமதி அளிக்கப்பட்டது. நேர அட்டவணையை விஜய் கடைப்பிடிக்காததே கூட்ட நெரிசலுக்கு காரணம். வேகமாக வரச் சொல்லி காவல் துறையினர் அறிவுறுத்தியதை மீறி, மாற்று வழியில் வந்தனர்' என்று வாதிடப்பட்டது.
எப்படி மதிப்பிட்டீர்கள்?: அப்போது நீதிபதி பரத் குமார், தவெக தரப்பில் ஆஜரானவர்களிடம் "மூன்று இடமும் போதுமானது கிடையாது. காலாண்டு விடுமுறை, வார விடுமுறை நாள் என்றபோதும், மக்கள் குறைவாக வருவார்கள் என்று எப்படி மதிப்பிட்டீர்கள்? 10 ஆயிரம் பேர் தான் வருவார்கள் என்று எதனை வைத்து கூறினீர்கள்?
அதிக கூட்டம் வருமென்று விஜய்க்கு தெரியுமா? கூட்டம் அளவு கடந்து சென்றபோது நிர்வாகிகள் பிரசாரத்தை நிறுத்தாதது ஏன்?' என சரமாரி கேள்விகளை எழுப்பினார்.
நிபந்தனைகள் ஏற்பு: இதற்கு தவெக தரப்பில், "சனிக்கிழமை சம்பள நாள் என்பதால் இவ்வளவு கூட்டம் வருமென நினைக்கவில்லை. காவல்துறை போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை. காவல்துறையின் 11 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டோம்' எனத் தெரிவிக்கப்பட்டது.
அறிவுறுத்தலை கேட்க மறுப்பு: காவல்துறை தரப்பில், "கூட்டம் அளவுகடந்து சென்ற போது விஜய் வந்த பிரசார பேருந்தை முன்னதாகவே நிறுத்தி பேசச் சொல்லி அறிவுறுத்தினோம், ஆனால், ஆதவ் அர்ஜுனா கேட்க மறுத்துவிட்டார்' எனத் தெரிவிக்கப்பட்டது.
ஜாமீன் மனுவை ஏற்க மறுப்பு: இதையடுத்து நீதிபதி பரத்குமார் கூறுகையில், "41 பேரின் இறப்புக்கு காரணமாக இருந்துள்ளீர்கள். எனவே உங்கள் ஜாமீன் மனுவை ஏற்க முடியாது' எனக் கூறி, மதியழகனை, மாசிபௌன்ராஜ் ஆகிய இருவரையும் 15 நாள்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் வைக்க உத்தரவிட்டார்.