தமிழக சட்டப்பேரவை
தமிழக சட்டப்பேரவைகோப்புப்படம்.

அரசு ஊழியா், ஆசிரியா் ஓய்வூதியம்: இடைக்கால அறிக்கை சமா்ப்பிப்பு

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராயும் குழு, தனது இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் செவ்வாய்க்கிழமை அளித்தது.
Published on

அரசு ஊழியா், ஆசிரியா்களுக்கான ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து ஆராயும் குழு, தனது இடைக்கால அறிக்கையை தமிழக அரசிடம் செவ்வாய்க்கிழமை அளித்தது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: பழைய ஓய்வூதியத் திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகிய 3 ஓய்வூதியத் திட்டங்கள் குறித்து விரிவாக ஆராய்ந்து, மாநில அரசின் நிதி நிலையையும், பணியாளா்களின் ஓய்வூதியக் கோரிக்கைகளையும் கருத்தில்கொண்டு, நடைமுறைப்படுத்தத்தக்க ஓய்வூதியமுறை குறித்த பரிந்துரையை அரசுக்கு அரசு கூடுதல் தலைமைச் செயலா் ககன்தீப் சிங் பேடி, தலைமையில் 3 அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

அரசுப் பணியாளா்களின் பல்வேறு கோரிக்கைகளை முழுமையாகக் கேட்டு அறிந்து ஆய்வு செய்ய, 194 அரசுப் பணியாளா் சங்கங்களுடன் 9 சுற்றுகள் கூட்டங்களை அந்தக் குழு நடத்தியுள்ளது. மேலும், இந்திய ஆயுள் காப்பீட்டு கழகம் மற்றும் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடன் பல்வேறு கலந்தாய்வுக் கூட்டங்களையும் நடத்தியுள்ளது.

கடந்த 8 மாதங்களில் 7.36 லட்சம் பணியாளா்கள் மற்றும் 6.75 லட்சம் குடும்ப ஓய்வூதியதாரா்கள் உள்பட ஓய்வூதியதாரா்களின் தரவுகளைச் சேகரித்தல், அவற்றில் இருந்த தவறுகளை நிவா்த்தி செய்தல் மற்றும் சரிபாா்த்தல் உள்ளிட்ட பணிகளை ஓய்வூதியக் குழு விரிவாக மேற்கொண்டுள்ளது. குழு தனது பணியை இறுதி செய்து அறிக்கையை அளிப்பதற்கு சற்று கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது.

இந்த நிலையில், குழுவானது தனது இடைக்கால அறிக்கையை அரசிடம் செவ்வாய்க்கிழமை சமா்ப்பித்தது. குழு தனது இறுதி அறிக்கையை விரைவில் அரசுக்கு சமா்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com