நிமிஷத்துக்கு ஒரு லட்சம் டிக்கெட்டுகள்: நவீனமயமாக்கல் பணி தீவிரம்
நிமிஷத்துக்கு ஒரு லட்சம் டிக்கெட்டுகள் பதியும் வகையிலான நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெற்கு ரயில்வே பயனாளா் ஆலோசனைக் குழு உறுப்பினா் ஏ.ஜாபா்அலி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் சென்னையில் கூறியதாவது:
இந்திய ரயில்வே துறையில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அம்ருத் பாரத் திட்டத்தில் நாடு முழுதும் 1,275 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்படுகின்றன. அதனால், பயணிகள் அனைத்து வசதிகளையும் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதாா் எண் இணைத்த பிறகே ரயில் டிக்கெட் முன்பதிவை உறுதிப்படுத்த முடியும் என்ற செயல்பாடு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்தியா - பூடான் இடையே 89 கி.மீ. தொலைவுக்கு ரூ. 4,033 கோடியில் ரயில் பாதை அமைப்பது வரவேற்கத்தக்கது.
தற்போது நிமிஷத்துக்கு 25,000 டிக்கெட்டுகள் பதியும் நிலை உள்ளது. அதை நிமிஷத்துக்கு ஒரு லட்சம் டிக்கெட்டுகள் பதியும் வகையிலான நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. நிகழாண்டுக்குள் இந்தப் பணிகள் முடியும் என்றாா் அவா்.