
சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பின் முதல் முறையாக தவெக தலைவர் விஜய் இன்று விடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
கரூரில், தவெக தலைவர் விஜய் சனிக்கிழமை மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்துக்குப் பிறகு, முதல் முறையாக அது தொடர்பாக விளக்கமளிக்கும் வகையில் இந்த விடியோவை வெளியிட்டுள்ளார்.
விஜய் விடியோவில் சொல்லியிருப்பது என்னவென்றால், வாழ்க்கையில் இதுபோன்ற வலி மிகுந்த தருணத்தை நான் உணர்ந்ததேயில்லை. என்னுடைய சுற்றுப் பயணங்களின்போது, மக்கள் என்னைப் பார்க்க வருவதற்கு ஒரே காரணம் அன்பும் பாசமும்தான்.
5 மாவட்டங்களில் பிரசாரம் செய்தேன், கரூரில் மட்டும் ஏன் இப்படி நடந்தது? மக்களுக்கு எல்லா உண்மைகளும் தெரியும். மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கரூர் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட மக்களை விரைவில் சந்திப்பேன். கரூரில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்மைகளை எல்லாம் சொல்லும்போது, கடவுளே நேரில் வந்து உண்மைகளை சொல்வது போல் இருந்தது. நிச்சயம் விரைவில் உண்மைகள் அனைத்தும் வெளியே வரும்.
என்னுடைய வலிகளை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றக் கட்சித் தலைவர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சூழலை புரிந்துகொண்டு எங்களுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த தலைவர்களுக்கும் நன்றி.
மக்களின் பாதுகாப்பே முக்கியம். இனி பாதுகாப்பு விஷயத்தில் மிகவும் கவனமாக இருப்பேன். மற்ற அனைத்து விஷயங்களையும் தாண்டி பாதுகாப்புதான் முக்கியம் என்பது எனது மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களை மட்டுமே இனி தேர்வு செய்து அந்த இடங்களில் மட்டும் பிரசாரம் செய்ய அனுமதி கேட்கப்படும்.
நடக்கக் கூடாதது நடந்துவிட்டது. நானும் மனிதன்தானே, அங்கு இப்படி மக்கள் இறந்துகொண்டிருக்கும்போது எப்படி ஊரை விட்டு வர முடியும். திரும்ப அங்கு போக வேண்டும் என்று நினைத்தேன். ஆனால், இதனைக் காரணம் காட்டி அங்கு வேறு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கரூர் செல்லவில்லை.
இந்த நேரத்தில், சொந்தங்களை இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கும் தெரியும், இந்த இழப்புக்கு எது சொன்னாலும் எதுவும் ஈடு இணையாகாது என்று எனக்குத் தெரியும்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்கள் விரைவாக குணமாகி வீடு திரும்ப வேண்டும். உங்களை நான் சந்திக்க வருகிறேன்.
கரூரில் எங்களுக்குக் கொடுக்கப்பட்ட இடத்தில் பேசிவிட்டு வந்ததைத் தவிர வேறு எந்தத் தவறையும் நாங்கள் செய்யவில்லை. ஆனால், எங்கள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் சமூக ஊடக நிர்வாகிகள் மீது முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
சி.எம். சார், உங்களுக்கு என்னைப் பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள். கட்சித் தொண்டர்கள் மீது கை வைக்க வேண்டாம். நான் ஒன்று வீட்டில் இருப்பேன், இல்லையென்றால் அலுவலகத்தில் இருப்பேன். என்னை என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்.
நம்முடைய அரசியல் பயணம் இன்னும் பலத்துடன், தைரியத்துடன் தொடரும் என்று விஜய் அந்த விடியோவில் பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.