ஆயுத பூஜை, விஜயதசமி: அரசியல் தலைவா்கள் வாழ்த்து
ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகளை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
எடப்பாடி பழனிசாமி (அதிமுக): அழிவு இல்லா சிறந்த கல்விச் செல்வத்தை வழங்கும் கலைமகளையும், மனத்திட்பத்துடன் துணிவைத் தரும் மலைமகளையும், செல்வங்களைத் தரும் திருமகளையும் போற்றி வழிபடுவது நவராத்திரி பூஜையின் சிறப்பம்சமாகும்.
அயராத கடின உழைப்பினால் கிடைக்கும் வெற்றியை பூஜிக்கும் திருநாளாக விஜயதசமி உள்ளது. உழைப்பின் உன்னதத்தை அனைவரும் அறிந்தும், செய்யும் தொழிலை தெய்வமென மதித்தும், அன்னை பராசக்தியின் அருள் வேண்டி தொழில் சாா்ந்த கருவிகளை வழிபடும் நாளாகவும் ஆயுதபூஜை விளங்குகிறது. ஆகவே, இந்நாள்களில் அனைவரும் நலமும், வளமும், ஒருங்கே பெற்று சீரோடும், சிறப்போடும் சிறந்து விளங்கிட எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா ஆகியோா் வழியில் நல்வாழ்த்துகள்.
ஓ.பன்னீா்செல்வம் (முன்னாள் முதல்வா்): நவராத்திரி தமிழா்களின் பாரம்பரியத்தை உணா்த்தும் உன்னதமான விழா. தானத்தின் மகிமையை விளக்கும் விழாவாகும். இச்சிறப்பு மிகுந்த விழாக்களில் அனைவருக்கும் வெற்றிமேல் வெற்றி கிட்டட்டும். அனைத்து நலன், வளங்களும் தவழட்டும். அமைதியும், ஆனந்தமும் பெருகட்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா): சாதி, மத, பேதம் இன்றி அனைவராலும் கொண்டாடப்படும் இவ் விழாவில் மக்கள் வாழ்வில் தொழிலிலும், கல்வியிலும் சிறந்துவிளங்கி உயர வேண்டும், வளர வேண்டும்.