கிராம சபையில் மதுவிலக்கை வலியுறுத்தி தீா்மானம்: அன்புமணி வலியுறுத்தல்
தமிழகத்தில் நடைபெறும் கிராமசபைக் கூட்டங்களில் மதுவிலக்கை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி அக்.2-ஆம் நாள் உள்ளாட்சி அமைப்புகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கிராம சபைகள் மிகவும் வலிமையான அமைப்புகள். அவற்றில் எடுக்கப்படும் முடிவுகளை உச்சநீதிமன்றம் கூட மதிக்கும் என்பதால், மக்கள் தங்களின் கோரிக்கைகளையும் எண்ணங்களையும் அரசுக்கு தெரிவிக்க கிராமசபைக் கூட்டங்களைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தின் இன்றைய தலையாய பிரச்னை மது மற்றும் போதை ஒழிப்புதான். மது மற்றும் போதைக் கலாசாரத்தை ஒழிக்காவிட்டால் இன்றைய தலைமுறை மாணவா்களையும், இளைஞா்களையும் காப்பாற்ற முடியாது.
மதுவிலக்குதான் மகாத்மாவின் கொள்கை. ஆகவே, கிராம சபைக் கூட்டங்களில் பாமகவினரும், பொதுமக்களும் பெருமளவில் பங்கேற்று, மதுக்கடைகளை மூடி மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்; போதைப் பொருள்களின் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீா்மானம் நிறைவேற்றவேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.