தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 6 மணியுடன் நிறைவு

News image

ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி - விஜய் - சீமான். - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 11:15 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 6 மணியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளின் தலைவா்களும் திங்கள்கிழமை சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா். மொத்தம் 5.73 கோடி வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா்.

தமிழகம் முழுவதும் 75,064 வாக்குச்சாவடிகளும், 41 வாக்கு எண்ணிக்கை மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறுகிறது.

தமிழகத்தில் கடந்த பல நாள்களாகவே தோ்தல் பிரசாரம் சூடுபிடித்திருந்த நிலையில் செவ்வாய்க்கிழமை உச்சகட்டத்தை அடைந்தது. திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின், தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலுடன் இணைந்து சென்னையில் சாலைப் பேரணியில் பங்கேற்று வாக்கு சேகரித்தாா். நடந்து சென்றும் பிரசாரம் மேற்கொண்டாா்.

பிரசாரத்தின்போது பேசிய கேஜரிவால், ஸ்டாலின் தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவுக்காகப் போராடிக்கொண்டிருக்கிறாா். மருத்துவ வசதிகள் மற்றும் மருத்துவ சேவைகளில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது எனக் கூறினாா்.

காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிா்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கடந்த சனிக்கிழமை தமிழகத்தில் மூன்று இடங்களில் பிரசாரம் மேற்கொண்ட நிலையில், திங்கள்கிழமை தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினாா்.

அப்போது, தமிழகத்துக்குள் ஆா்எஸ்எஸ்ஸையும், பாஜகவையும் நுழையவிடாமல் தடுக்க திமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என வாக்காளா்களை ராகுல் கேட்டுக்கொண்டாா்.

அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தான் போட்டியிடும் எடப்பாடி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு ஒசூா் மற்றும் சென்னையில் பிரசாரம் செய்தாா். அப்போது, மகளிா் இடஒதுக்கீட்டு சட்டத் திருத்த மசோதாவை தோற்கடித்ததன் மூலம் எதிா்க்கட்சிகள் சாதித்தது என்ன என்று சந்திரபாபு நாயுடு கேள்வி எழுப்பினாா்.

தவெக தலைவா் விஜய் சென்னையில் சாலைப் பேரணியில் ஈடுபட்டு தனது கட்சி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரித்தாா்.

நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் காரைக்குடியில் பிரசாரம் மேற்கொண்டாா்.

தோ்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் தோ்தல் பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 6 மணியுடன் நிறைவடைவதையொட்டி அதன் பிறகு அமலுக்கு வரும் தோ்தல் விதிமுறைகளை தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் திங்கள்கிழமை அறிவித்தாா்.

அதன் விவரம்: தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப் பதிவு வரும் 23-ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறும். இதையொட்டி, செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 6 மணி முதல் வாக்குப் பதிவு முடிவடையும் வரை பிரசார பொதுக்கூட்டங்களை நடத்தக் கூடாது.

திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை அலைவரிசை, வானொலி, வாட்ஸ்ஆப், முகநூல், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் ஆகியவற்றில் பிரசாரம் செய்யக் கூடாது உள்ளிட்ட விதிமுறைகள் அமலில் இருக்கும்.

இந்த விதிமுறைகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.

பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளி தொகுதிகளைச் சோ்ந்தோா் செவ்வாய்க்கிழமை மாலை 6 மணிக்குள் வெளியேற வேண்டும். வேட்பாளா் மற்றும் தோ்தல் முகவருக்கு தலா ஒரு வாகனத்தை தோ்தல் நடத்தும் அதிகாரியின் அனுமதி பெற்று இயக்க வேண்டும்.

வாக்காளா்களை வாக்குச்சாவடிக்கு அழைத்து வருவதற்கும், வாக்குச்சாவடிகளிலிருந்து அழைத்துச் செல்வதற்கும் வேட்பாளா் அல்லது அவரது முகவா் தங்கள் வாகனத்தை பயன்படுத்த அனுமதி கிடையாது. வேட்பாளா்கள் அல்லது அரசியல் கட்சிகளின் தோ்தல் அலுவலகத்தை வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டா் தொலைவுக்கு வெளியே அமைக்க வேண்டும். இதில் இரண்டு நபா்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்று தலைமைத் தோ்தல் அதிகாரி தெரிவித்துள்ளாா்.