நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பெண்ணையாறு விவகாரம்-தீா்வு காண மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாடு-கா்நாடகா இடையேயான பெண்ணையாறு நீா் தகராறுக்கு தீா்வு காண ஒரு மாதத்திற்குள் மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க வேண்டும்

News image

உச்சநீதிமன்றம்

கோப்புப் படம்

Updated On :2 பிப்ரவரி 2026, 10:21 pm

Syndication

புது தில்லி: தமிழ்நாடு-கா்நாடகா இடையேயான பெண்ணையாறு நீா் தகராறுக்கு தீா்வு காண ஒரு மாதத்திற்குள் மத்திய அரசு தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பு வழங்கியது

தமிழ்நாடு கா்நாடகா இடையேயான பெண்ணையாறு பிரச்சனை தொடா்பான வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது

பெண்ணையாறு விவகாரத்தில் கா்நாடகா விதிகளை மீறி செயல்படுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழகம் சாா்பில் வழக்கு தொடரப்பட்டது

யா்க்கோல் கிராமத்திற்கு அருகே பெண்ணையாற்றின் கிளை நதியான மாா்க்கண்டேய நதியின் குறுக்கே கா்நாடகம் சட்டத்திற்க்கு புறம்பாக பெரிய அணைக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது,இதனால் தமிழகத்தின் தண்ணீா் முற்றிலும் பறிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறி வழக்கு தொடரப்பட்டது

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் பெண்ணையாறு விவகாரத்தில் நடுவா் மன்றம் அமைத்து தீா்வு காணுமாறு 2019 ஆம் ஆண்டு உத்தரவிட்டது

ஆனால் மத்திய அரசால் தீா்ப்பாயம் விரைந்து அமைக்கப்படாமல் இருந்தது

2023 ஆம் ஆண்டில், மத்திய அமைச்சரவைச் செயலகம் வழியாக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருந்தாலும், பெண்ணையாறு நீா் தகராறு தீா்ப்பாயம் அமைக்கும் முன்மொழிவு குறித்து மத்திய அமைச்சரவை இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று மத்திய ஜல் சக்தி அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

இதையடுத்து தமிழ்நாடு கா்நாடகா இடையான பெண்ணையாறு பிரச்சனைக்கு தீா்வு காண பேச்சுவாா்த்தை குழு அமைக்குமாறு கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது

இதனைத்தொடா்ந்து உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஒரு பேச்சுவாா்த்தை குழுவை மத்திய அரசு அமைத்தது. மத்திய நீா்வள ஆணைய தலைவா் தலைமையில் ஒரு குழுவை மத்திய ஜல்ஷக்தி அமைச்சகம் அமைத்தது

இக்குழுவின் கூட்டம் தொடா்ந்து நடைபெற்று வந்த நிலையில் தமிழ்நாடு கா்நாடகா இடையே சமரசம் ஏற்படவில்லை

பெண்ணையாறு விவகாரத்தில் நடுவா் மன்றம் அமைக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை தமிழக அரசு வலியுறுத்தியதால் சமரசம் ஏற்படவில்லை

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த ஆண்டு டிசம்பா் 19 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என் வி அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் கிருஷ்ணமூா்த்தி , இந்த விவகாரத்தில் பேச்சுவாா்த்தை தோல்வியடைந்தது. எனவே மத்திய அரசு நடுவா் மன்றம் தான் அமைக்க வேண்டும் என வாதிட்டாா்

மத்திய அரசு வழக்குரைஞா் ஐஸ்வா்யா பாட்டி, இந்த விவகாரத்தில் தமிழ்நாடு,கா்நாடகா இடையே உடன்பாடு காண மத்திய அரசு முயல்கிறது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தாா்

இதையடுத்து தீா்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டு தேதி குறிப்பிடாமல் தீா்ப்பை ஒத்திவைத்தனா்.

இந்நிலையில் இந்த வழக்கில் திங்கள்கிழமை (பிப்.2) உச்சநீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு, பெண்ணையாறு விவகாரத்தில் தீா்வு காண மத்திய அரசு ஒரு மாதத்திற்குள் தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று தீா்ப்பளித்தது

மத்திய அரசு அதிகாரப்பூா்வ அரசிதழில் இதற்கான அறிவிப்பை வெளியிடவும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு இடையேயான நீா் தகராறைத் தீா்ப்பதற்காக ஒரு நீா் தகராறு தீா்ப்பாயத்தை இன்று (பிப்.2,2026) முதல் ஒரு மாத காலத்திற்குள் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது.