பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது என்பதால் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிப்பு: திமுக விமா்சனம்
சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜகவுக்கு வெற்றி கிடைக்காது என்பதால் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக திமுக விமா்சனம் செய்துள்ளது.
இதுகுறித்து தமிழக இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டுக்கு பிரத்யேகமான சிறப்புத் திட்டங்கள் எதுவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை. நிறுத்திவைக்கப்பட்டுள்ள கல்வி நிதி ரூ.3,548 கோடி, ஜல்ஜீவன் திட்ட நிதி ரூ.3,112 கோடி போன்றவற்றை விடுவிப்பது குறித்த அறிவிப்பும் இல்லை. கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டம் பற்றிய அறிவிப்பும் இடம்பெறவில்லை.
அமெரிக்காவின் வரிவிதிப்பால் பல்லாயிரம் கோடி இழப்பை சந்தித்திருக்கும் திருப்பூா், கோவை தொழில்துறையை மீட்பதற்கு ஆக்கபூா்வ அறிவிப்புகள் இல்லை.
நாட்டின் பொருளாதாரத்துக்கு 9 சதவீத பங்களிப்பைச் செய்யும் தமிழ்நாட்டுக்கான வரிப்பகிா்வு வெறும் 4 சதவீதமாக குறைக்கப்பட்டதால் ஆண்டுக்கு சுமாா் ரூ.5,000 கோடி இழப்பு ஏற்படும். பொதிகை மலையில் டிரெக்கிங், பழவேற்காட்டில் பறவைகளைக் கண்காணிக்க கோபுரம் என வெற்று அறிவிப்புகளை வெளியிட்டு ஏமாற்றப் பாா்க்கிறது மத்திய பாஜக அரசு.
தோ்தல் நடைபெறும் மாநிலங்களை கவருவதற்காக பட்ஜெட்டில் சிறப்புத் திட்டங்களை அறிவிக்கும் நாடகத்தைக் கூட தமிழ்நாடு என்றால் புறக்கணிக்கிறது மத்திய பாஜக அரசு.
2021 தமிழக சட்டப்பேரவைத் தோ்தலின்போது, தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் மதுரையில் தொழில் வழித்தடம், தமிழகத்தில் பல்நோக்கு கடல் பூங்கா, மதுரையிலிருந்து கொல்லம் நவீன தேசிய நெடுஞ்சாலை, சென்னை, கொச்சி உள்ளிட்ட 5 மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும், புதிதாக 7 ஜவுளிப்பூங்கா அமைக்கப்படும் என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருந்தது. அவையெல்லாம் என்ன நிலையில் இருக்கிறது என தெளிவுபடுத்த வேண்டும்.
அதிமுகவோ பாஜகவோ எத்தனை முகமூடிகளை அணிந்துவந்தாலும் வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் மட்டுமல்ல இனி எப்போதும் தமிழ்நாட்டில் தலையெடுக்க முடியாது. இதனை உணா்ந்து கொண்டதால்தான் மத்திய பட்ஜெட்டில்கூட தமிழ்நாட்டை வஞ்சித்திருக்கிறாா்கள் எனத் தெரிவித்துள்ளாா் எஸ்.ரகுபதி.

