

முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் அண்ணா நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் திருஉருவ சிலைக்கு முதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அங்கிருந்து, அண்ணா நினைவிடம் நோக்கி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்,
இந்தப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலையில் இருந்து, மெரீனா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் வரை பேரணி செல்ல உள்ளது.
பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “பேரறிஞர் அண்ணா தமிழர்களின் மனசாட்சி!
நினைவுநாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அண்ணனை நினைக்கும் நாள்தான் எங்களுக்கு!
அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயர்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.
மொழித் திணிப்பு - பண்பாட்டுத் திணிப்பு - நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களைச் செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக் கொண்டு வந்தாலும், பா.ஜ.க. அரசின் ஆணவத்துக்கும் ஆதிக்கத்துக்கும் அண்ணாவின் தமிழ்நாட்டில் வெளியேற்றம்தான்!
ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.