எதிர்க்கட்சி எம்.பி.க்களின் உரிமைகள் பறிப்பு: இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக எம்.பி.க்கள் பேட்டி

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), சு. வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன்.
நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு. வெங்கடேசன்.
Updated on
1 min read

நமது நிருபர்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர் (காங்கிரஸ்), சு. வெங்கடேசன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்) ஆகியோர் குற்றஞ்சாட்டினர்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர்கள் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: கட்சி வேறுபாடின்றி ஜனநாயகத்தை காக்கும் போராட்டத்தை முன்னெடுத்த எட்டு பேரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காகிதத்தைக் கிழித்து வீசியதற்காக நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக ஆளும் கட்சி கூறுகிறது. ஆனால், கடந்த இரு நாள்களாக அரசமைப்புச் சட்ட உரிமையை அவமதித்து ஆளும் பாஜக நாடகமாடுகிறது.

பள்ளிக்கூடத்தை நடத்துவதுபோல நாடாளுமன்றத்தை நடத்த முடியாது. எதிர்க்கட்சிகள் என்ன பேச வேண்டும், என்ன பேசக் கூடாது என்பதை பாஜக தீர்மானிக்க முடியாது. அரசமைப்பு சாசனம் வழங்கியுள்ள உரிமையின்படி நாங்கள் பேசுகிறோம், செயல்படுகிறோம்.

ஜனநாயக உரிமைப்படி எங்களது குரலை அவையின் மையப் பகுதிக்குச் சென்று ஒலித்து பிரச்னை எழுப்பினால், அது என்னவென்றுகூட கேட்கத் தயாராக இல்லை. தேசத்தின் பாதுகாப்பு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் பேசும்போது, அதை எழுப்பக் கூடாது என்கின்றனர்.

நாடாளுமன்றத்தின் உயிர் என்பது விவாதத்தில் இருக்கிறது, மரபில் இருக்கிறது. ராகுல் காந்தி ஒரு புத்தகத்தை மேற்கோள்காட்டிப் பேசும்போது, அதில் தவறு இருந்தால், "தவறு' என்று சொல்லலாமே தவிர, பேசவே கூடாது என்றால் எப்படி? ராகுல் பேசும்போதே, பாஜக கூட்டணியில் இருக்கும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் பேச அழைக்கப்படுகிறார்.

240 எதிர்க்கட்சி உறுப்பினர்களின் உரிமையை முற்றிலும் பறித்துவிட்டு, ஆளுங்கட்சி தரப்பில் இருக்கும் ஒருவரைப் பேச அழைப்பது இதுவரை நாடாளுமன்ற மரபிலேயே இல்லாத ஜனநாயகப் படுகொலையாகும். இந்த விஷயத்தில் எங்களுடைய போராட்டம் தொடரும். இடைநீக்கம் செய்யப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 8 பேரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் சாசன புத்தகத்தை கையில் வைத்து அமைதி வழியில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com