தமிழகத்தில் அரசு அலுவலகங்களின் மேற்கூரையில் அமைக்கப்படும் சூரிய ஒளி மின்உற்பத்தி திட்டம் மூலம் 20 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் பணி விரைவில் தொடங்கப்படும் என பசுமை எரிசக்தி கழகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்கள் சாா்பில் மின்வாரியத்துக்கு செலுத்த வேண்டிய மின் கட்டணம் முறையாக செலுத்தப்படுவதில்லை. பல அலுவலகங்களில் கட்டணம் நிலுவையில் இருந்து வருகிறது. இந்தப் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்கள், ஆட்சியா் அலுவலகங்கள், அரசு மருத்துவமனைகள், அரசுக் கல்லூரிகள், அரசுப் பள்ளிகளின் மேற்கூரைகளில் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகளில் பசுமை எரிசக்தி கழகம் ஈடுபட்டு வருகிறது. கடந்த ஆண்டு இதற்கான ஒப்பந்தம் வெளியிடப்பட்ட நிலையில், ஒப்பந்தப் பணிகள் முடிவுற்று, சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து பசுமை எரிசக்தி கழக அதிகாரிகள் கூறியது:
தமிழகம் முழுவதுமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முதல்கட்டமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகக் கட்டடங்களில் சூரிய மின்தகடுகள் அமைக்க ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை மேற்கொள்ள தகுதி வாய்ந்த கட்டடங்கள் அடையாளம் காணும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்ற வந்தன. இந்தப் பணிகள் நிறைவடைந்து, கட்டடங்களில் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான பணிகளை ஒப்பந்த நிறுவனங்கள் செய்து வருகின்றன.
ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் சூரிய ஒளி மின் உற்பத்திக்கான அனைத்து கட்டமைப்புகளை ஏற்படுத்துவதுடன், அதை 25 ஆண்டுகள் பராமரிக்க வேண்டும். மாதம் எவ்வளவு யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறதோ, அலுவலகத்துக்கான மின்பயன்பாடு போக, மீதமுள்ள மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்யும். அதற்கான கட்டணத்தைக் கணக்கிட்டு அந்த நிறுவனத்துக்கு பசுமை எரிசக்தி வழங்கும். ஒரு மெகாவாட்டுக்கு திட்ட செலவாக ரூ.6 கோடி மதிப்பிடப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக சென்னைக்குள்பட்ட தோ்தெடுக்கப்பட்ட முக்கிய அரசு அலுவலக கட்டடங்களில் 20 மெகாவாட் அளவிலான மின் உற்பத்திக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மருத்துவமனைகளுக்கு 24 மணி நேரமும் மின்சாரம் தேவைப்படும் என்பதாலும், பரப்பளவு அதிகமாக இருக்கும் என்பதாலும் மருத்துவமனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், பணிகளை விரைவில் முடித்து மின் உற்பத்தியை தொடங்கப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மின் உற்பத்திக் கழகத்துக்கு புதிய இணையதளம் தொடக்கம்

தெலங்கானாவில் சூரிய மின்சக்தி தகடு உற்பத்தி ஆலை தொடங்கி வைப்பு!

தமிழகத்தில் புதிய உச்சத்தை எட்டிய சூரிய சக்தி மின் உற்பத்தி

அம்மன் சிலை மீது சூரிய ஒளி
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


