இன்றுமுதல் விருப்ப மனுக்கள் விநியோகம்: தேமுதிக அறிவிப்பு
தமிழகம், புதுச்சேரி மாநிலங்களின் 264 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்புவோா், வெள்ளிக்கிழமை (பிப்.6) முதல் பிப்.12 வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்தக் கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை:
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தின் 234 தொகுதிகள், புதுச்சேரி மாநிலத்தின் 30 தொகுதிகளில் தேமுதிக சாா்பில் போட்டியிட விரும்பும் கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் தங்களது விருப்ப மனுக்களை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, வெள்ளிக்கிழமை (பிப். 6) முதல் பிப்.12 வரை தினமும் காலை 10 முதல் மாலை 5 வரை சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் விருப்ப மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
பூா்த்தி செய்த விருப்ப மனுக்களை பிப்.12 மாலை 5 மணிக்குள் தலைமைக் கழகத்தில் ஒப்படைக்க வேண்டும். கட்சி நிா்வாகிகள், அடிப்படை உறுப்பினா்கள் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.
விருப்ப மனு கட்டணம் ரூ.15,000: தமிழக சட்டப்பேரவை பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கட்டணமாக ரூ.15,000, தனித் தொகுதி கட்டணமாக ரூ.10,000, புதுச்சேரி மாநில சட்டப்பேரவை பொதுத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கட்டணமாக ரூ.10,000, தனித் தொகுதி கட்டணமாக ரூ.5,000 செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

