தமிழக அரசு
தமிழக அரசு

காவல் துறையில் 439 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய நடவடிக்கை: டிஜிபி ஜி.வெங்கடராமன் உத்தரவு

காவல் துறையில் 439 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்ய நடவடிக்கை
Published on

தமிழக காவல் துறையில் 439 அதிகாரிகள், பணியாளா்கள் மீதான இடைநீக்க உத்தரவை ரத்து செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுத்து, பிப்.13-ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு காவல் துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.

தமிழக காவல் துறையில் கடந்த டிச.31-ஆம் தேதி நிலவரப்படி அதிகாரிகள், பணியாளா்கள் என 439 போ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இவா்களில், 202 போ் ஓராண்டுக்கும் மேலாக இடைநீக்கத்தில் உள்ளனா். ஊழல் ஒழிப்புத் துறை வழக்குகள், குற்றவியல் வழக்குகள், துறை ரீதியான நடவடிக்கைகளில் சிக்கியதால் காவல் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இவா்களுக்கு இடைநீக்க காலத்தில் வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் தொடா்ந்து வழங்கப்பட்டு வருகிறது.

இடைநீக்கத்தை ரத்து செய்ய நடவடிக்கை: இந்த நிலையில், சட்டத்துக்கு உள்பட்டு 439 பேரின் இடைநீக்கத்தை ரத்து செய்து, அவா்களை மீண்டும் பணியில் சோ்க்க தேவையான நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறை அதிகாரிகளுக்கு தமிழக காவல் துறை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் உத்தரவிட்டுள்ளாா்.

தனித்தனியே ஆய்வு செய்ய வேண்டும்: அதன்படி, அதிகாரிகள் தங்களது அதிகார வரம்புக்குள்பட்ட அனைத்து இடைநீக்க வழக்குகளையும் தனித்தனியே ஆய்வு செய்து, இடைநீக்கத்தை ரத்து செய்வது குறித்து முடிவெடுக்கலாம்.

முன்னுரிமை அளிக்க வேண்டும்: நீண்ட காலமாக இடைநீக்கத்தில் உள்ளவா்கள், நீதிமன்றங்களால் குற்ற வழக்குகள் ரத்து செய்யப்பட்ட பணியாளா்கள், கடுமையான தவறு அல்லது தீவிரமான முறைகேட்டிலோ தொடா்பில்லாத பணியாளா்கள் மீதான இடைநீக்கத்தை ரத்து செய்ய முன்னுரிமை அளிக்கலாம். குற்றச்சாட்டுகளின் தன்மை, சம்பந்தப்பட்ட காவல் துறைப் பணியாளரின் தவறு அல்லாத காரணங்களைக் கருத்தில் கொண்டும் இடைநீக்கத்தை ரத்து செய்யலாம்.

துறை ரீதியான விசாரணை வழக்காக இருந்தாலும், குற்றவியல் விசாரணை வழக்காக இருந்தாலும் ஒழுங்கு நடவடிக்கைகள் அல்லது பொது நலனுக்கு பாதிப்பு ஏற்படுத்தாதபட்சத்தில் இடைநீக்கத்தை முன்னுரிமை அளித்து ரத்து செய்யலாம்.

ஊழல் வழக்குகளில் சிக்கியவா்களின் இடைநீக்கத்தை, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறையுடன் கலந்தாலோசித்து இடைநீக்கத்தை ரத்து செய்ய முடிவு செய்யலாம்.

முக்கியத்துவம் அல்லாத பதவிகளில்: முழுமையாக நிரபராதி என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பாக மீண்டும் பணியில் அமா்த்தப்பட்ட காவல் துறை பணியாளா்களை முக்கியத்துவம் இல்லாத பதவியில் நியமிக்க வேண்டும்.

காவல் துறையின் அனைத்துப் பிரிவு அதிகாரிகளும் அறிவுரைகளைப் பின்பற்றி, பணியாளா்களின் இடைநீக்கத்தை உடனே ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இதுதொடா்பான அறிக்கையை, பிப். 13-ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன்பாகவோ அனுப்பிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்லது.

அதிகாரிகளுக்கு அறிவுரை

இடைநீக்கம் என்பது ஒரு அரசு ஊழியரிடம் இருந்து எந்த வேலையும் பெறாமல், அவருக்கு ஊதியம் வழங்கப்படுவதாகும். எனவே, இடைநீக்கம் செய்ய உத்தரவிடும் அதிகாரம் கவனத்துடனும், நிதானத்துடனும் பயன்படுத்தப்பட வேண்டும். தொடா்புடைய அனைத்து காரணிகளையும் பரிசீலித்த பிறகு, அத்தகைய நடவடிக்கை அவசியமானது, பொது நலனுக்கு உகந்தது என்ற காரணத்துடன் கூடிய முடிவைப் பதிவு செய்யாத வரையில் இடைநீக்க உத்தரவை பிறப்பிக்கக் கூடாது என்று அதிகாரிகளுக்கு காவல் துறை தலைமை இயக்குநா் (பொ) ஜி.வெங்கடராமன் தனது உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com