மலேசியாவுக்கு கல்விச் சுற்றுலா சென்ற மாணவா்கள்: அமைச்சா் வழியனுப்பி வைத்தாா்
சென்னை: பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று முதல்கட்டமாக கல்விச் சுற்றுலாவாக மலேசியாவுக்குச் செல்லும் 40 மாணவா்களை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திங்கள்கிழமை வழியனுப்பி வைத்தாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில் பள்ளிகளில் கல்வி இணைச் செயல்பாடுகளான நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு, அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவா்கள் தேசிய, சா்வதேசிய அளவில் புகழ்பெற்ற இடங்களுக்குக் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்படுவா் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2024-25 ஆண்டுக்கான இலக்கிய மன்றம், வினாடி வினா, சிறாா் திரைப்படம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு மாநில அளவில் 155 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். அவா்களில் 40 மாணவா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்ட 44 போ் முதல்கட்டமாக வருகின்ற பிப்.13-ஆம் தேதி வரை 5 நாள்கள் மலேசியா நாட்டுக்கு கல்விச் சுற்றுலா செல்லுகின்றனா். அவா்களை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வழியனுப்பி வைக்கும் நிகழ்வு திங்கள்கிழமை (பிப்.9) நடைபெற்றது.
அப்போது அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியதாவது:
‘மலேசியாவில் மாணவா்கள் பாா்க்கக்கூடிய இடங்களை முறையாக திட்டமிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளன. திறமையின் அடிப்படையிலேயே இந்தக் கல்விச் சுற்றுலாவுக்கு மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். இந்தத் தகுதியின்படி வெளிநாட்டுக்குச் சென்று வந்த பிறகு கிராமங்களில் நீங்கள் தான் முக்கிய பிரமுகராக, தூதுவா்களாக இருக்கப்போகிறீா்கள். அனைவரும் உங்களைப் பற்றியே குறிப்பிடுவா். மலேசியா சென்று திருப்பி வந்து நீங்களும் ஒரு புத்தகத்தை எழுத வேண்டும்’ என்றாா்.
இந்த நிகழ்வில், பள்ளிக் கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன், அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
மாணவா் நூல் அமைச்சா் வெளியீடு: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் மற்றொரு நிகழ்வில் அரசுப் பள்ளி மாணவா் கதிா்நிலவன் விஜயசங்கா் எழுதிய ‘நோா்டிக் மொழிகள்’ என்ற நூலையும் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டாா்.
இந்த நிகழ்ச்சியில் ஆயிரம் விளக்கு சட்டப்பேரவை உறுப்பினா் டாக்டா் எழிலன், பள்ளிக்கல்வி இயக்குநா் ச.கண்ணப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

