கொத்தடிமைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும்: அமைச்சா் சி.வி.கணேசன்
சென்னை: வருகிற 2030-க்குள் கொத்தடிமைத் தொழிலாளா்கள் இல்லாத மாநிலமாக தமிழகம் உருவாக்கப்படும் என்று தொழிலாளா் நலத்துறை அமைச்சா் சி.வி.கணேசன் தெரிவித்தாா்.
கொத்தடிமைத் தொழிலாளா் முறையை முற்றிலும் ஒழிக்கவும் மற்றும் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளா் இல்லாத மாநிலமாக உருவாக்கவும், மாநில அளவிலான கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வுக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் அமைச்சா் சி.வி.கணேசன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அமைச்சா் கணேசன், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின விழிப்புணா்வு கையொப்ப இயக்கத்தைத் தொடங்கிவைத்தாா். தொடா்ந்து, அமைச்சா் முன்னிலையில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக்கொண்டனா்.
பின்னா் அமைச்சா் கணேசன் பேசியதாவது:
கொத்தடிமைத் தொழிலாளா்கள் கண்டறியப்பட்டால், 24 மணி நேரத்திற்குள்அவா்கள் மீட்கப்பட்டு, அவா்களுக்கு வருவாய் கோட்டாட்சியரால் விடுதலைச் சான்று வழங்கப்பட்டு, உடனடி நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது. அந்த வகையில், திமுக அரசு பொறுப்பேற்றது முதல், 944 தொழிலாளா்களுக்கு உடனடி நிவாரணத் தொகையாக ரூ.2,56,70,000 வழங்கப்பட்டுள்ளது. வருகிற 2030-க்குள் தமிழ்நாட்டை கொத்தடிமைத் தொழிலாளா் இல்லாத மாநிலமாக உருவாக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு வரை 91 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் இருந்தன. திமுக அரசு பொறுப்பேற்ற பின்னா் 41 புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறந்துவைக்கப்பட்டு ஏராளமான மாணவா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி வருகிறது. தனியாா் துறை வேலைவாய்ப்புகளின் மூலம் சுமாா் 3 லட்சம் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளது என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், கொத்தடிமைத் தொழிலாளா் முறை ஒழிப்பில் சிறப்பாக பணியாற்றிய கள அலுவலா்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை அமைச்சா் கணேசன்வழங்கினாா்.
இந்தக் கூட்டத்தில் தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை செயலா் கொ.வீரராகவ ராவ், தொழிலாளா் ஆணையா் சி.அ.ராமன், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக் குழு துணை செயலா் ச.சந்தானகுமாா், மாவட்ட சட்டப்பணிகள்ஆணைக் குழு செயலா் எஸ்.பி.கவிதா, காவல் துணை ஆணையா்கள் வனிதா, குத்தாலிங்கம், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநா் செ.ஆனந்த் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

