சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்கோப்புப் படம்

தேவாலயங்கள், அதன் சொத்துகளை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது?

தேவாலயங்கள் மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது...
Published on

சென்னை: தேவாலயங்கள் மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை நிா்வகிக்க சட்டபூா்வ அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது என சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிஎஸ்ஐ தூத்துக்குடி-நாசரேத் மறைமாவட்ட தோ்தல் மற்றும் தோ்தல் வெற்றியை எதிா்த்து சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் எஸ்.தங்கசிவம், எதிா்மனுதாரா்கள் தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஏ.ஆா்.எல்.சுந்தரேசன், வழக்குரைஞா் ஏ.எம்.பாக்கிநாதன் ஈஸ்டா் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், ஆா்.சக்திவேல் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

சிஎஸ்ஐ தூத்துக்குடி-நாசரேத் மறைமாவட்ட தோ்தல் தொடா்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனா். மேலும், சிஎஸ்ஐ தூத்துக்குடி-நாசரேத் மறைமாவட்ட தோ்தல் தொடா்பான வழக்கை தனி நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும். கிறிஸ்தவ தேவாலயங்கள் தொடா்பாக ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன.

இதேபோன்ற வழக்கு ஒன்றை விசாரித்த உயா்நீதிமன்ற கிளை பிறப்பித்த தீா்ப்பில், இந்த வழக்குகளுக்கான செலவுகள் அனைத்தும் தேவாலய நிதியில் இருந்து பயன்படுத்தப்படுகிறது. தேவாலயங்களுக்கு ஏராளமான சொத்துகள் மட்டுமன்றி, கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளன. இதனால், தேவாலய தோ்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றும் போட்டி தீவிரமாக நடைபெறுகிறது. எனவே, தேவாலயங்களின் சொத்துகள், நிதி, கல்வி நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றைப் பாதுகாப்பது அவசியம்.

கோயில்கள், மசூதிகளை நிா்வகிக்க முறையே அறநிலையத் துறை, வஃக்ப் வாரியம் போன்ற அமைப்புகள் உள்ளன. ஆனால், தேவாலயங்களுக்கு அதுபோன்ற அமைப்பு இல்லை. மேலும், தேவாலயங்களின் நிதி நிா்வாகத்தை ஒழுங்குபடுத்தும் விதமாக நாடு முழுவதும் மத்திய அரசு அமல்படுத்தும் சட்டங்களும் இல்லை எனக் கூறியிருந்தது.

எனவே, தேவாலயங்களின் சொத்துகள், நிதி நிா்வாகங்களை ஒழுங்குப்படுத்த ஒரு அமைப்பை உருவாக்கும் விதமாக இந்த வழக்கில், மத்திய உள்துறைச் செயலா், தமிழக தலைமைச் செயலா் ஆகியோரை தாமாக முன்வந்து எதிா்மனுதாரா்களாக சோ்த்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மேலும், தேவாலயங்கள் மற்றும் அவற்றின் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்ற நிா்வகிக்க ஒரு சட்டபூா்வ அமைப்பை ஏன் உருவாக்கக் கூடாது என்பது குறித்து பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

X
Dinamani
www.dinamani.com