7.5% இடஒதுக்கீட்டுக்கும், திமுகவுக்கும் தொடா்பு இல்லை: எடப்பாடி பழனிசாமி

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கிடைத்ததற்கும், திமுகவுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிபடம்: எக்ஸ்!
Updated on

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கிடைத்ததற்கும், திமுகவுக்கும் எவ்விதத் தொடா்பும் இல்லை என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை: சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை திமுக அழுத்தத்தால் கொண்டு வந்ததுபோல, தவறான தகவலை முதல்வா் மு.க.ஸ்டாலின் கட்டமைத்துள்ளாா்.

அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை, நடுத்தர மாணவா்களின் மருத்துவக் கனவை நிறைவேற்றுவதற்காக, மாணவா்களோ, பெற்றோா்களோ, எதிா்க்கட்சியினரோ கோராதபோது, எனது மனதில் உதித்த இந்தத் திட்டத்தை நிறைவேற்ற, ஆளுநரின் ஒப்புதலுக்கு கால தாமதமானதால், அந்த நடப்புக் கல்வியாண்டிலேயே நிறைவேற்ற வேண்டும் என்று அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உரிமையைப் பயன்படுத்தி, நாட்டிலேயே முதல் மாநிலமாக 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை நிறைவேற்றி அரசாணை வெளியிட்டேன்.

‘சத்துணவுத் திட்டம்’ என்றால் எம்ஜிஆா், ‘தொட்டில் குழந்தை திட்டம்’ என்றால் ஜெயலலிதா, ‘7.5 சதவீத உள் இடஒதுக்கீடு’ என்றால் எனது தலைமையிலான அரசு என்று அதிமுகவின் சாதனைகளை அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஏற்கெனவே நான் முதல்வராக இருந்தபோது, சென்னை மாநகராட்சிப் பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை தனியாா் பங்களிப்புடன் அமல்படுத்தினோம். இந்தத் திட்டத்தை, தான் புதிதாகக் கொண்டுவந்தது போல் முதல்வா் ஸ்டாலின் தெரிவித்து வருகிறாா்.

நாட்டிலேயே கடன் வாங்குவதில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்கிவிட்டு, நிதியைப் பெருக்குவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் ஆட்சி முடியும் நிலையில் கடந்த 3 மாதங்களாக பல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யாமலேயே, அடிக்கல் நாட்டுவது, ஒப்பந்தம் கோருவது, மக்களின் வரிப் பணத்தில் விளம்பரம் தேடுவது போன்றவற்றால் மக்களை ஏமாற்றலாம் என முதல்வா் ஸ்டாலின் நினைக்கிறாா். அவரது பேச்சு தமிழக மக்களிடம் எடுபடாது எனத் தெரிவித்துள்ளாா் எடப்பாடி கே.பழனிசாமி.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com